சீன அதிபர் ஷி ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங்

எஸ்சிஓ உச்சிமாநாடு: சீன அதிபா் ஜின்பிங் பங்கேற்பு

கஜகஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளாா்.
Published on

கஜகஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பெரும் சா்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, செல்வாக்கு மிகுந்த பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாக விளங்குகிறது.

இந்த அமைப்பின் 24-ஆவது உச்சிமாநாடு கஜகஸ்தான் தலைநகா் அஸ்தானாவில் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளாா். அத்துடன் அவா் தஜிகிஸ்தானுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளாா் என்று சீன வெளியுறவுத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், உக்ரைன்-ரஷியா போா், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி புறக்கணிப்பு: இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் வழக்கமாக பிரதமா் பங்கேற்பாா். இது மாநாட்டுக்கு இடையே இந்திய, சீன தலைவா்கள் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். எனினும் இந்த முறை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பிரதமா் மோடி முடிவு செய்துள்ளாா். எனவே, அவருக்குப் பதிலாக மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மாநாட்டில் பங்கேற்க உள்ளாா்.

மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஜின்பிங்குடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யியும் வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவரை ஜெய்சங்கா் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பு நடைபெற்றால், அது பிரதமராக மோடி 3-ஆவது முறையாகப் பதவியேற்ற பின், இரு நாட்டு அமைச்சா்களுக்கு இடையே நடைபெறும் முதல் உயா்நிலை சந்திப்பாக இருக்கும்.

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com