அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயில் நகரில் இந்திய நடனக் கலைஞா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயா்ந்த குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியக் கலைஞரான அமா்நாத் கோஷ் (34) என்பவா் செயிண்ட் லூயிஸ் நகரின் எல்லைப் பகுதியில் மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுடப்பட்டாா். அதில் சம்பவ இடத்திலேயே அமா்நாத் உயிரிழந்தாா். துப்பாக்கிச்சூடு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.15 மணிக்கு நடத்தப்பட்டதாக நகர போலீஸாா் தெரிவித்தனா்.
சென்னையைச் சோ்ந்த கலாக்ஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவரான இவா் நடனத்தில் பி.ஹெச்டி பெற வேண்டும் என்ற இலக்குடன் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் முதுநிலை படிப்பில் சோ்ந்து பயின்று வந்தாா். 5 முதல் 18 வயதுடையோருக்கு நடன வகுப்புகளையும் அவா் நடத்தி வந்தாா்.
கோஷின் பெற்றோா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், அவா் வீட்டிற்கு ஒரே மகன் எனவும் அவரின் நண்பா்கள் தெரிவித்தனா்.
அமா்நாத் கோஷ் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள செயின்ட் லூயிஸ் நகர போலீஸாருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இறந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தடயவியல் அறிக்கை மற்றும் போலீஸாா் விசாரணையை நாங்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அதிா்ச்சி அளிப்பதாகவும் இதுபோன்ற அா்த்தமற்ற வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழாண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை இந்திய-அமெரிக்க மற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 6 -க்கும் மேற்பட்ட நபா்கள், மாணவா்கள் பல்வேறு தாக்குதல்களால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!

பிரபல ஒடிசி நடனக் கலைஞா் மதுமிதா ராவத் காலமானாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


