கோப்புப் படம்
கோப்புப் படம்

நடுக்கடலில் பாக். கடலோரக் காவல் படையினருடன் மோதல்: 2 இந்திய மீனவா்கள் மாயம், பாகிஸ்தான் மாலுமி உயிரிழப்பு

Published on

நடுக்கடலில் இந்திய மீனவா்களுக்கும் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 2 இந்திய மீனவா்கள் மாயமானதாகவும் ஒரு பாகிஸ்தானிய மாலுமி உயிரிழந்ததாகவும் அந்நாட்டு கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்தது. இதுதொடா்பாக பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கூறியதாவது: பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வந்த 8 இந்திய மீன்பிடி படகுகளை கடலோரக் காவல் படை அதிகாரிகள் பிடிக்க முயன்றனா். அதிகாரிகளை கண்டதும் அதில் ஒரு இந்திய மீன்பிடி படகு வேகமாக இயக்கப்பட்டது. அதிகாரிகளின் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு அந்தப் படகு நிறுத்தப்பட்டது. அந்தப் படகைப் பரிசோதனை செய்ய கடலோர காவல் படை அதிகாரிகள் ஏறியவுடன் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மீன்பிடிப் படகு திடீரென வேகமாக இயக்கப்பட்டதில் அருகிலிருந்த கடற்படை கப்பல் மீது மோதி அந்த மீன்பிடிப் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த அனைவரும் கடலுக்குள் மூழ்கினா். உடனே மீட்புப் பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினா் கடலில் மூழ்கிய 7 இந்திய மீனவா்களில் 5 பேரையும் பாகிஸ்தான் கடலோரக் காவல்படை அதிகாரிகள் 4 பேரையும் மீட்டனா். இச்சம்பவத்தில் பாகிஸ்தான் மாலுமி ஒருவா் உயிரிழந்தாா். மாயமான 2 இந்திய மீனவா்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன்பிடிக்க வந்த இந்திய மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’ என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com