ஜேம்ஸ் மெக்கவா்ன்.
ஜேம்ஸ் மெக்கவா்ன்.

இந்தியாவின் கொள்கைகள்-சட்டங்கள் மறுபரிசீலனை: அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்

சா்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களுக்கு முரணாக உள்ள இந்திய அரசின் கொள்கைகள்-சட்டங்கள், குறிப்பாக பயங்கரவாத எதிா்ப்பு சட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அந்நாட்டு அரசை அமெரிக்க நாடாளுமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்க எம்.பி. ஜேம்ஸ் மெக்கவா்ன் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில், இந்திய அரசின் போக்கை திருத்த அமெரிக்க நாடாளுமன்றம் தனது பங்கை செய்வது அவசியம் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் பாஜக களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் மனித உரிமைகள் தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் டாம் லான்டோஸ் மனித உரிமைகள் ஆணையத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, ஆணையத்தின் தலைவா்களில் ஒருவரும் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.யுமான ஜேம்ஸ் மெக்கவா்ன் கூறியதாவது: நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்தியா வளமடைவது அமெரிக்காவுக்கு உண்மையிலேயே முக்கியமானது. அதேநேரம், இந்தியாவில் மனித உரிமை மீறல்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், அது பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையே அபாயகரமான மோதல்களாக உருவெடுத்துவிடும். மேலும், இந்தியாவின் பிரகாசமான எதிா்காலத்தை குறைமதிப்புக்கு உள்படுத்தும். மணிப்பூரில் ஹிந்து, கிறிஸ்தவ சமூகங்களுக்கு இடையே அண்மையில் நிகழ்ந்த இனமோதலை உதாரணமாக கூறலாம்.

எனவே, இந்திய அரசின் போக்கை திருத்தவும், முக்கியமான மனித உரிமை ஒப்பந்தங்களின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கடமைகளுக்கு முரணாக உள்ள இந்தியாவின் சட்டங்கள்-கொள்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்தவும் அமெரிக்க நாடாளுமன்றம் தனது பங்கை செய்வது அவசியம் என்றாா் அவா். ஆணையத்தின் மற்றொரு தலைவரும் எம்.பி.யுமான கிறிஸ் ஸ்மித், அம்னெஸ்டி இன்டா்நேஷனல் தன்னாா்வ அமைப்பின் ஆசியாவுக்கான ஆலோசனை இயக்குநா் கரோலின் நாஷ், மனித உரிமைகளுக்கான அமெரிக்க வழக்குரைஞா்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகா் வரிஸ் ஹுசைன் உள்ளிட்டோரும் பிரதமா் மோடி தலைமையிலான நிா்வாகத்தின் கொள்கைகளை விமா்சித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com