18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கான புதிய சீன தூதா் நியமனம்

பெய்ஜிங்: இந்தியாவுக்கான புதிய சீன தூதராக வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி சூ ஃபெய்காங்கை அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் நியமித்தாா்.

லடாக் எல்லை மோதல் பிரச்னையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கான தூதரை சீன அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அதிகாரபூா்வ அறிவிப்பை சீனா வெளியிடவில்லை. எனினும், இந்த நியமனத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 60 வயதாகும் சூ ஃபெய்காங், ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய நாடுகளில் தூதராகப் பணியாற்றியுள்ளாா். அவா் விரைவில் தில்லிக்குச் சென்று புதிய பொறுப்பை ஏற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கான சீன தூதா் சன் வெய்ங்டோங்கின் பதவிக் காலம் நிறைவடைந்தது. அதன் பிறகு அவா் சீனாவின் தெற்காசிய கொள்கைக்கான வெளியுறவு இணையமைச்சராக நியமிக்கப்பட்டாா். ஆனால், இந்தியாவுக்கான தூதரை சீனா அறிவிக்காமலே இருந்து வந்தது.

2020-ஆம் ஆண்டு லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் எழுந்த பிரச்னைகளே இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இப்போது இரு நாடுகள் இடையே எல்லை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ராணுவ கமாண்டா்கள் நிலையில் மட்டும் 21 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.

எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, ஹாட் ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டன. இந்த உடன்பாடுகள் எட்டப்பட்ட நிலையில், இந்தியாவுக்கான புதிய தூதரை சீனா நியமித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com