
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றிய மேஜர் ராதிகா சென், ஐக்கிய நாடுகளின் 2023 ஆம் ஆண்டுக்கான ராணுவ பாலின வழக்குரைஞருக்கான விருது வழங்கப்படவுள்ளது.
மே 30 அன்று ஐ.நா சபை அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச நாள் கொண்டாடுகிறது.
இந்த நாளையொட்டி, இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் இருந்து ஐநா ராணுவ பாலின வழக்கறிஞருக்கான விருதை மே 30ஆம் தேதி பெறுகிறார். மேஜர் ராதிகா சென் "உண்மையான தலைவர், தனது முன்மாதிரி" என்று ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கோவில் வடக்கு கிவுவில் மோதல்கள் அதிகரித்து வருகிறது. மேஜர் ராதிகா சென் காங்கோவில் உள்ள ஐ.நா தூதரகத்துடன் இந்திய பெண் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், ஆயுதக் குழு மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன், குறிப்பாக பெண்கள், சிறுமிகளுடன் பேசினார். மேஜர் ராதிகா சென்னின் பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு ஆகியவை மோதலில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐ.நா. அமைப்பின் குழுவில் பணிபுரிந்த மேஜர் ராதிகா சென்னுக்கு, இங்குள்ள உலக அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் '2023 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது' வழங்கப்படுகிறது.
மேஜர் சென் காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கில் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை இந்திய விரைவு வரிசைப்படுத்தல் ஆயுதப்படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு:
1993 இல் ஹிமாச்சல பிரதேசத்தில் பிறந்த மேஜர் ராதிகா சென், 2016 இல் ராணுவத்தில் சேர்ந்தார். பயோடெக் இன்ஜினியரிங் படித்து ஐஐடி மும்பையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐஐடி மும்பையில் இருந்தபோது ராணுவத்தில் சேர முடிவு செய்தார். அவர் மார்ச் 2023 இல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்திய ரேபிட் டெப்லாய்மென்ட் ஆயுதப்படைப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2024 இல் தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டார்.
இந்த மதிப்புமிக்க ஐநா விருதைப் பெறும் இரண்டாவது இந்திய அமைதிப் படை வீரர் மேஜர் ராதிகா சென் ஆவார். இந்த விருதைப் பெற்ற முதல் நபர் மேஜர் சுமன் கவானி ஆவார், அவர் தெற்கு சூடானில் உள்ள யூஎன் மிஷன் உடன் பணிபுரிந்தார். அவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து மேஜர் ராதிகா சென் கூறுகையில், “காங்கோ மக்களாட்சிக் குடியரசின் சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர தங்களால் இயன்றதை வழங்குவதால், இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது" என்றார்.
தனக்கு இந்த விருது வழங்கப்படுவதை அறிந்ததும், அந்த விருதுக்காகவும், தனது பங்கிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.