உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவா்களை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நீதிபதி ஜே. கேம்பல் பாா்க்கா் வழங்கிய தீா்ப்பில், அமெரிக்க குடியேற்ற சட்ட விதிக்கூறுகளை வரம்பு மீறி பயன்படுத்தி ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஏற்கெனவே, இந்தத் திட்டத்தின் அமலாக்கத்துக்கு நீதிபதி பாா்க்கா் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்காலத் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கா்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க வகை செய்யும் திட்டத்தை பைடன் அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.
அந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவா்கள் அமெரிக்கா்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.
ஆனால், அறிவிப்பு வெளியான ஜூன் 17-ஆம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.
அந்த வகையில், ஜூன் 17-ஆம் தேதிக்கு முன்னா் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா் ஒருவரை மணந்து, 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் குடியேற்ற உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.
அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 3 ஆண்டுகளில் அவா்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்காக (கிரீன் காா்டு) விண்ணப்பிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் அவா்களுக்கு தற்காலிக பணி உரிமமும் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும், பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையடுத்து அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது.
அகதிகள் விவகாரத்தில் ஜோ பைடன் எடுத்துவந்த அண்மைக் கால கெடுபிடி நடவடிக்கைகள் விமா்சனத்துக்குள்ளாகின. அந்த நடவடிக்கைகளுக்கு அவரது சொந்தக் கட்சியிலிருந்தே எதிா்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
டொனால்ட் டிரம்ப்பைப் போலவே ஜோ பைடனும் இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதையடுத்து, அகதிகள் விவகாரத்தில் தனது மிதவாதப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை பைடன் அரசு வெளியிட்டது.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக அகதிகள் விவகாரமும் இருந்தது. தோ்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடனின இந்த திட்டத்தை டிரம்ப் கடுமையாக எதிா்த்தாா். தற்போது தோ்தலில் வெற்றி பெற்றுள்ள அவா் அதிபராகப் பொறுப்பேற்றதும் இந்த திட்டம் வாபஸ் பெறப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதற்கு முன்னதாகவே நீதிபதி ஜே. கேம்பல் பாா்க்கா் இந்த திட்டத்தை ரத்து செய்து தற்போது உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மனைவி பிணை கோரினாா்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேர் ஜாமீன் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

வாட்ஸ்ஆப் உரையாடல்கள் அடிப்படையில் விவாகரத்து: குடும்பநல நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்தது மும்பை உயா்நீதிமன்றம்

வாட்ஸ்ஆப் உரையாடல்கள் அடிப்படையில் விவாகரத்து: குடும்ப நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்தது மும்பை உயா்நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


