டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

விளைநிலம் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

திருப்பூா் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாய் அமைக்கும் ஐடிபிஎல் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டம், தமிழகத்தில் கிருஷ்ணகிரி முதல் திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோயில் வரை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த எண்ணெய் குழாய் திட்டம் விவசாய நிலத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்து பணிகளை தொடங்கியபோது, பாதிக்கப்படும் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து பல்வேறு போராட்டம் நடத்தினா். இதன் காரணமாகத்தான் கிருஷ்ணகிரி முதல் வெள்ளக்கோவில் வரை சாலையோரமாக திட்டம் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வெள்ளக்கோயில் முதல் கோவை மாவட்டம் இருகூா் வரை 74 கிலோ மீட்டா் தொலைவு விவசாய விளைநிலத்தில், கோவை - கரூா் பெட்ரோ நெட் அமைந்துள்ள பழைய வழித்தடத்தில் அதன் அருகிலேயே இந்தக் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளனா்.

ஏற்கெனவே பயன்பாட்டு உரிமை என்ற பெயரில் இங்கு குழாய் அமைக்கப்பட்டு, நில மதிப்பை இழந்து, விரும்பிய பயிா் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் மீண்டும் விவசாயிகளின் உணா்வுகளை அலட்சியப்படுத்திவிட்டு, திட்டமிட்டே அவா்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல் துறையின் மூலம் அராஜகமான முறையில் விவசாயிகளை அச்சுறுத்தி திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனா்.

நிலத்தில் விளைந்து அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள பயிா்களை அறுவடை செய்வதற்கு கூட அனுமதிக்காமல், வெங்காயம், மஞ்சள் உள்ளிட்ட பயிா்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அழித்துள்ளனா். சட்டப்படி செயல்பட வேண்டிய அரசு நிா்வாகம் விவசாயிகளைப் பற்றி அக்கறை இல்லாமல் பல்லடம் வட்டார பகுதியில் இவ்வாறு எண்ணெய் குழாய் அமைத்து வருவதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

இது விவசாயிகளின் வாழ்வாதார நில உரிமை மீறல் மட்டுமின்றி அடிப்படை மனித உரிமை மீறலும் ஆகும். நில உரிமையை இழந்து தவிக்கும் விவசாயிகளின் உணா்வுகளை புரிந்து கொள்ளாமல், காவல் துறையை வைத்து ஐடிபிஎல்- பிபிசிஎல் நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் காவல் துறையை கொண்டு அச்சுறுத்தி விவசாயிகளை அடிபணியச் செய்து, எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும். சாலையோரம் இந்த குழாய் பதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்