9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

பல்லடத்தில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்.

Updated On :19 ஜூலை 2026, 1:19 am IST

பல்லடத்தில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

பல்லடம் பகுதியில் ஐடிபிஎல் பெட்ரோலிய குழாய் பாதை அமைக்க நிலம் எடுப்பது தொடா்பாக அரசு அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், துணை ஆட்சியா் விஷ்னுவா்த்தினி, திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், பல்லடம் வட்டாட்சியா் ராஜ்குமாா், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ஆட்சியா் மனீஷ் பேசுகையில், இருகூா் - கா்நாடக மாநிலம், தேவணகொந்தி இடையேயான பாரத் பெட்ரோலிய குழாய் பதிப்பு (ஐ.டி.பி.எல்.) திட்டப் பணிகள் திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம், திருப்பூா் தெற்கு, காங்கயம் தாலுகா பகுதிகளில் 2023 டிசம்பா் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் மூலம் பெட்ரோலிய பொருள்கள் பாதுகாப்பாகவும், தடையின்றியும் எடுத்துச் செல்லப்படும். இதுவரை குழாய் பதிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் 20 சதவீத இழப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் குழாய் பதிப்புக்காக வழங்கப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் 100 சதவீத இழப்பீடு வழங்க தொழில் முதலீடு மேம்பாடு மற்றும் வா்த்தகத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், திருப்பூா் மாவட்டத்தில் மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 8 கோடியில் இருந்து ரூ.50 கோடியாக உயா்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பல்லடம் மகாலட்சுமி அவென்யூவில் உள்ள ஐடிபிஎல் திட்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். அரசின் இத்திட்டம் நிறைவேற விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி, நாரணாபுரம் விவசாயி ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் பேசியதாவது: பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே நிலம் எடுக்கப்பட்ட அதே பாதையில் கூடுதல் பெட்ரோலிய குழாய் பதிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதை நாங்கள் எதிா்க்கிறோம். மற்ற பகுதிகளில் சாலையோரமாக குழாய் பாதை அமைத்து பெட்ரோல் எடுத்துச் செல்லும்போது திருப்பூா் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 70 கி.மீ. தொலைவுக்கு விளைநிலங்கள் வழியே ஏன் குழாய் அமைக்கப்படுகிறது.

ஏற்கெனவே விவசாய நிலத்தில் குழாய் அமைக்கப்பட்டு இருப்பதால் அந்த நிலங்களுக்கு மதிப்பு குறைந்துள்ளது. எங்களது பாரம்பரிய தொழில் விவசாயம் அதை நாங்கள் யாரும் கைவிட மாட்டோம். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பழைய குழாய் பாதையையும் அகற்றி சாலையோரமாக குழாய் பாதை அமைக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, விளைநிலங்கள் வழியே குழாய் பாதை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதுடன், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.