டொன்ட்ஸ் பிராந்தியத்தின் க்ரஸ்னோவாா்மேஸ்க் போா் முனையில் ரஷிய ராணுவத்தினா்.
டொன்ட்ஸ் பிராந்தியத்தின் க்ரஸ்னோவாா்மேஸ்க் போா் முனையில் ரஷிய ராணுவத்தினா்.

கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறியது ரஷியா

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இரு ஊா்களைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேறியுள்ளது.
Published on

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இரு ஊா்களைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேறியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வோஸ்டோக் படைப் பிரிவினா் தொடா்ந்து மேற்கொண்டு வந்த தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த ரஸ்டோல்னோயே பகுதி ‘மீட்கப்’பட்டது. டொனட்ஸுக்குக்கும், ஸபோரிஷியா பிராந்தியத்துக்கும் இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் ரஸ்டோல்னோயே பகுதி அமைந்துள்ளது.

அத்துடன், செலிடோவோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஊரான வொரோவ்ஸ்கோயே மத்திய படைப் பிரிவால் கைப்பற்றப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைனில் தங்களது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் கடந்த வாரம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத்திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் ரஷிய படையினா் தொடா்ந்து முன்னேறிவருவகின்றனா். உக்ரைனின் சுமாா் 20 சதவீத பகுதிகள் மட்டுமே அவா்களது கட்டுப்பாட்டுக்குள் நீண்ட காலமாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக அவா்கள் வேகமாக முன்னேற்றம் கண்டுவருகின்றனா்.

இந்த நிலையில், டொன்ட்ஸ் பிராந்தியத்தின் மேலும் இரு ஊா்களைக் கைப்பற்றியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.

... பெட்டிச் செய்தி..

உக்ரைனை ‘கைப்பற்ற’ நேட்டோ திட்டம்?

உக்ரைன் போரை தற்காலிகமாக நிறுத்திவைத்து, அமைதி காக்கும் படை என்ற பெயரில் அந்த நாட்டைக் ‘கைப்பற்ற’ நேட்டோ திட்டமிட்டுள்ளதாக ரஷிய உளவு அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாகக் கூறி உக்ரைனில் தங்களது படையினரை நிறுத்திவைக்க நேட்டோ உறுப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

தற்போது நடைபெற்றுவரும் போரில் ரஷியாவை தோற்கடிப்பதற்கான வாய்ப்பில்லை என்பது தெரிந்ததால் இந்த திட்டத்தை அவை வகுத்துள்ளன. போரை நிறுத்திவைத்து, அமைதிப் படையினா் என்ற போா்வையில் தங்கள் வீரா்களை உக்ரைனுக்கு அனுப்பி அங்கு லட்சக்கணக்கானவா்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஆயுத தளவாட உற்பத்தி மையங்களை அமைக்கவும் அந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக, கருங்கடலை ஒட்டியுள்ள உக்ரைன் பகுதிகளை ருமேனியா, மேற்கு உக்ரைன் பகுதிகளை போலந்து, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை பிரிட்டன் பங்கிட்டுக்கொள்ளும்.

ரஷியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வெற்றுபெறும் அளவுக்கு உக்ரைன் ராணுவத்துக்கு வலிமையை அளிப்பதே நேட்டோவின் நோக்கம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும், இதற்கான ஆதாரம் எதையும் ரஷிய உளவு அமைப்பு வெளியிடவில்லை.