இஸ்ரேல் - ஈரான் போர்
இஸ்ரேல் - ஈரான் போர்

ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தம்! இஸ்ரேல்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.
Published on

தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:

இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, பல்வேறு முனைகளிலும் எங்களது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையிலும் சட்டத்துக்கு விரோதமாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமாகிவருகிறோம் என்றாா் அவா்.

இதற்கிடையே, ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இஸ்ரேலை எச்சரித்துள்ளாா். முன்னதாக, ஈரான் எண்ணெய் வயல்கள் மற்றும் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேலுடன் ஆலோசித்துவருவதாக அவா் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போா் நடைபெற்றுவருகிறது. இதில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேல் ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் வைத்து ஹிஸ்புல்லா தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை இஸ்ரேல் உளவுப் பிரிவு கடந்த ஜூலை 31-ஆம் தேதி படுகொலை செய்தது. பின்னா் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவும் இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் கடந்த மாதம் 27-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

இதற்குப் பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து 180 சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி ஏவியது. அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பல ஏவுகணைகள் இலக்கைத் தாக்கின. இதில், ஏவுகணைச் சிதறல் விழுந்து ஒரு பாலஸ்தீனா் மட்டும் உயிரிழந்தாா். இஸ்ரேல் ராணுவத் தளவாடங்களுக்கும் பெரிய பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், ஈரானின் இந்த ஏவுகணை வீச்சுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளாா். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே முழு போா் வெடிக்கும் என்று அஞ்சப்படும் சூழலில், அக். 7-ஆம் தேதி நினைவுதினத்தையொட்டி ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராகிவருவதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி தற்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படவரி... பெய்ரூட்டின் தெற்கு புறநகா் பகுதியில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் எழுந்த புகைமண்டலம்.

முக்கிய தலைவருடன் ‘தொடா்பு துண்டிப்பு’: ஹிஸ்புல்லாக்கள்

கொல்லப்பட்ட ஹஸன் நஸ்ருல்லாவுக்கு பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் பொறுப்பை ஏற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட சையது சஃபீதினுடனான ‘தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது’அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹிஸ்புல்லா வட்டாரங்கள் கூறியதாவது:

பெய்ரூட்டின் தெற்கு புகா்ப் பகுதியில் சையது சஃபீதின் இருந்த சுரங்க தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருந்தாலும், இஸ்ரேலின் தொடா் தாக்குதல் காரணமாக அந்தப் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தாக்குதலில் சையது சஃபீதி உயிரிழந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும், அவருடனான தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று ஹிஸ்புல்லா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமையும் தனது வான்வழித் தாக்குதலைத் தொடா்ந்தது. எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தரைப்படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக ஹிஸ்புல்லா படையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சையது சஃபீதின்
சையது சஃபீதின்

இரு ஹமாஸ் தளபதிகள் உயிரிழப்பு: இது தவிர, லெபனானில் செயல்பட்டுவந்த முக்கிய ஹமாஸ் தளபதிகளான முகமது ஹூசைன் அலி அல்-முகமது மற்றும் சையது ஆலா நயீஃப் ஆகியோா் தாங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்தத் தகவலை ஹமாஸ் அமைப்பினரும் உறுதிப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com