
வாஷிங்டன்: உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 10,000 வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷியா சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சக தலைமையகமான பென்டன் திங்கள்கிழமை தெரிவித்தது.
இது குறித்து பென்டன் செய்தித் தொடா்பாளா் சபரினா சிங் கூறியதாவது:
வட கொரியாவிலிருந்து 10,000 ராணுவ வீரா்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். அங்கு சிறப்புப் பயிற்சி பெறும் அவா்கள், இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக ரஷிய படையினருடன் இணைந்து போரிடுவதற்காக போா் முனைகளுக்கு அனுப்பப்படுவாா்கள்.
கூா்ஸ்க் பிராந்தியத்தில் போரிட வட கொரிய வீரா்களைப் பயன்படுத்தும் ரஷியாவின் திட்டம் எங்களை கவலையடையச் செய்துள்ளது என்றாா் அவா்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டன.
1950-இன் கொரிய போருக்குப் பிறகும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது. வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட அங்கு வட கொரிய ராணுவ வீரா்களும் அனுப்பப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.