அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார், பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணியளவில் டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான நேரடி விவாதம் தொடங்கியது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு, தான் வாக்களிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார், பிரபல பாப் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட்.
டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குதான் நான் வாக்களிக்கப் போகிறேன். ஏனென்றால், அவர் உரிமைகளுக்காக போராடுகிறார்.
அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என்று நினைக்கிறேன். நாம் அமைதியால் வழிநடத்தப்பட்டால், இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இளம் வாக்காளர்கள் பலரும் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான விவாதத்தை அடிப்படையாக வைத்தே யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் முடிவும் செய்வார்கள்.