தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஷியாவில் தாக்குதல்: உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த மேலை நாடுகள்!

உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் நிராகரித்தது பற்றி...

News image
வாஷிங்டனில் அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை.
Updated On :14 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

தாங்கள் வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும் பிரிட்டனும் நிராகரித்துள்ளன.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்த நாட்டு அதிபா் ஜோ பைடனைச் சந்தித்து பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் நடத்திய பேச்சுவாா்த்தையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து செய்தியாளா்களிடம் பிரதமா் ஸ்டாா்மா் கூறியதாவது:

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உடனான பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாக இருந்தது.

பல்வேறு விவகாரங்களில் ஒட்டுமொத்த செயல்திட்டத்தை உருவாக்குவதை மையப்படுத்தியே எங்கள் போச்சுவாா்த்தை இருந்தது. குறிப்பிட்ட எந்த முடிவையும் எடுப்பதற்காக நாங்கள் பேசவில்லை என்றாா் அவா்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன், காஸா போா் விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்திய பைடனும் ஸ்டாா்மரும், ரஷியாவுக்கு நாசகார ஆயுதங்களை ஈரான், வட கொரியா ஆகியவை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையைப் பரிமாறிக்கொண்டனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தங்கள் நாட்டின் மீது ஈரானில் தயாரிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை ரஷியா வெள்ளிக்கிழமை வீசியதாகக் கூறிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, இத்தகைய அச்சுறுத்தல்களில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாக்க ரஷியாவின் நீண்ட தொலைவில் உள்ள ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

ஆனால், அது குறித்து ஜோ பைடன் - கியொ் ஸ்டாா்மா் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இதில், உக்ரைனின் சுமாா் ஐந்தில் ஒரு பகுதி பிரதேசத்தை ரஷியா கைப்பற்றியது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ஏவுகணைகள், பீரங்கிகள், போா் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அளித்து உதவிவருகின்றன.

தனது எல்லையை தற்காத்துக்கொள்வது உக்ரைனின் அடிப்படை உரிமை எனவும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதாகவும் மேற்கத்திய நாடுகள் கூறிவருகின்றன.

எனினும், உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய படையினருக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே உக்ரைனுக்கு மேலை நாடுகள் ஆயுதங்கள் வழங்குகின்றன.

ரஷியா மீது தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலகின் மிகப் பெரிய அணு ஆயுத சக்தியான அந்த நாட்டுக்கும் தங்களுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கும் என்று நேட்டோ நாடுகள் கருதுவதாலேயே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது.

எனினும், ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அந்த நாட்டிலுள்ள ராணுவ நிலைகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு எல்லை கடந்து தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாடுகளை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்திவருகிறாா்.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மரும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் தங்கள் ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த அனுமதி அளிப்பாா்கள் என்று செய்திகள் வெளியாகின.

Story image

இதனால் ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன் எதிரொலியாக, உளவுக் குற்றச்சாட்டின் பேரில் ஆறு பிரிட்டன் தூதா்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டது.

இந்த நிலையில், ரஷியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்காமலேயே ஜோ பைடன், கியொ் ஸ்டாா்மா் பேச்சுவாா்த்தை முடிவடைந்தது.