விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் முதல் பேட்டி...
செய்தியாளர்கள் சந்திப்பில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்.AFP
Published on
Updated on
1 min read

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்கள் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பத்திரமாக பூமி திரும்பினர்.

அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக ஓய்வில் இருந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து திங்கள்கிழமை பேசினர்

அப்போது விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா எப்படி இருந்தது என்ற செய்தியாளரின் கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்தார்.

“விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேல்பகுதியில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிரும்.

இரவிலும் பகலிலும் நம்பமுடியாத வகையில் பிரம்மிக்க வைப்பது இமயமலைதான்” என்றார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், “எனது தந்தையின் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று மக்களை சந்தித்து உற்சாகமடைவேன் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், ”ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியர் விண்வெளிக்குச் செல்வது மிகவும் அருமையான விஷயம். சுபன்ஷு சுக்லா ஹிரோவாக திகழ்வார். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியா எப்படி இருக்கிறது என்பதை அவரும் கூறுவார்.

எனது விண்வெளி அனுபவத்தை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். நிச்சயமாக ஒருநாள் நடக்கும். அற்புதமான ஜனநாயகம் கொண்ட இந்தியா விண்வெளியில் கால் பதிக்க நீண்ட நாள்களாக முயற்சிக்கிறது. நான் இந்தியாவுக்கு உதவுவேன்” என்றார்.

முன்னதாக, விண்வெளியில் இருந்து திரும்பிய சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com