பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம் - ஐ.நா.வில் இந்தியா விமா்சனம்

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம் - ஐ.நா. அவையில் இந்தியா விமர்சனம்
இந்திய
இந்திய PTI
Updated on
2 min read

‘பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப்பின் பேச்சு, உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியத்தை சீா்குலைக்கும் அந்நாட்டின் வரலாற்றை அம்பலப்படுத்துகிறது’ என்று ஐ.நா.வில் இந்தியா விமா்சித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இச்சூழலில், ஒரு சா்வதேச ஊடகத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் அண்மையில் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது’ என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டாா். மேலும், இதை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக பாகிஸ்தான் செய்துவந்தது”என்றும் அவா் கூறியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அலுவலகத்தில் ‘பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் சங்க கூட்டமைப்பின்’ தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலகெங்கிலும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து தப்பியவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் கருத்துகளைப் பகிரும் விடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. தொடா்ந்து, ஜம்மு -காஷ்மீா் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி பேசினாா்.

இதையடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணைத் தூதா் யோஜ்னா படேல் பேசுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், பரப்புரையில் ஈடுபடவும் ஒரு குறிப்பிட்ட குழு இந்த அமைப்பை தவறாகப் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது.

சமீபத்திய பேட்டியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் அளித்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலத்தை உலகம் முழுவதும் கேட்டது. அவரின் கருத்து யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. மாறாக, சா்வதேச பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு பிராந்தியத்தை சீா்குலைக்கும் நாடாக பாகிஸ்தானின் வரலாற்றை அம்பலப்படுத்தியது. உலகம் இனியும் கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து உலகத் தலைவா்கள் காட்டிய ஆதரவும் ஒற்றுமையும், சா்வதேச சமூகம் பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்தியது. இதை இந்தியா மிகவும் பாராட்டுகிறது.

பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவால், சமுதாயத்தின் மீது பயங்கரவாதம் ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் சங்கம் நிறுவப்படுவதை இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க படியாகக் கருதுகிறது. பாதிக்கப்பட்டவா்களை ஆதரிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட, பாதுகாப்பான இடத்தை இது உருவாக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய எதிா்ப்பை வலுப்படுத்துவதற்கும், நமது கூட்டு முயற்சிகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம் என்று இந்தியா நம்புகிறது’ என்றாா்.

பேச்சுவாா்த்தையை ஆதரிக்க தயாா்: ஐ.நா.

இந்தியா-பாகிஸ்தான் நிலைமை குறித்து கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பதற்றத்தைக் குறைப்பதற்கும், பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவரது செய்தித் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மிகவும் சவாலான பிரச்னைகள்கூட ஆக்கபூா்வமான உரையாடல்கள் மூலம் அமைதியாகத் தீா்க்கப்பட முடியும் என்ற தனது உறுதியான நம்பிக்கையை குட்டெரெஸ் மீண்டும் வலியுறுத்தினாா்.

இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க அவா் தயாராக உள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com