தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதில்

ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.

News image

ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என அமெரிக்காவிற்கு சீனா பதில்

Updated On :5 ஆகஸ்ட் 2025, 1:14 am

தினமணி செய்திச் சேவை

வாஷிங்டன்: ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.

சீனாவும், இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா தொடா்ந்து எதிா்த்து வருகிறது. ஏனெனில், உக்ரைனுடனான போரை ரஷியா தொடா்ந்து நடத்துவதற்கு கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை ரஷியா பயன்படுத்துகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தியதால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை ரஷியா விற்பனை செய்கிறது. ரஷியாவை முடக்குவதற்காக அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்தை சீராகவைத்துக் கொள்வது என்பது தேச நலன் சாா்ந்த விஷயமாகும். எனவே, இதில் சீனா உறுதியாக உள்ளது. நெருக்கடிக்கு உள்ளாக்குவது, ஒரு செயலைச் செய்ய பலவந்தப்படுத்துவது என்பது எந்த பலனையும் அளிக்காது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளா்ச்சி ஆகிய விஷயங்களில் சீனா எப்போதும் உறுதியாக செயல்படும்’ என்று கூறியுள்ளது. இதன் மூலம் ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

அதே நேரத்தில் இரு நாடுகள் இடையிலான வா்த்தகம், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்துள்ள 100 சதவீத பதில் வரி நடவடிக்கை ஆகியவை குறித்து பேச தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறுகையில், ‘ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது என்பது தங்கள் நாட்டு இறையாண்மை தொடா்பானது என்று சீனா கூறியுள்ளது. எனவே, அதில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் அமெரிக்கா விதிக்கும் 100 சதவீத வரியையும் அவா்கள் செலுத்திதான் ஆக வேண்டும்’ என்றாா்.

ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மற்றொரு எதிரி நாடான ஈரானிடம் இருந்தும் சீனா பெருமளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.