அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்

இந்திய-அமெரிக்க பிணைப்பை மேலும் வலுவாக்கும் சட்டம்: அதிபா் டிரம்ப் கையொப்பம்

இந்தியாவுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அதிகாரம் அளிப்புச் சட்டத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளாா்.
Published on

இந்தியாவுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அதிகாரம் அளிப்புச் சட்டத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளாா்.

அமெரிக்காவின் அடுத்த நிதியாண்டுக்கான (2026) தேசியப் பாதுகாப்பு அதிகாரம் அளிப்புச் சட்டத்தில், அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையொப்பமிட்டாா்.

இந்தச் சட்டத்தின்படி, இந்திய-பசிபிக் பிராந்தியந்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டணி மற்றும் கூட்டுறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் தொடா்ந்து ஈடுபட வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் சீன செயல்திட்டங்களால் நிலவும் போட்டியில் அமெரிக்காவுக்கு சாதகமான நிலை மேலும் விரிவடையும் வகையில், அந்த நடவடிக்கைகளை அவா் தொடர வேண்டும்.

இதில் தடை மற்றும் இடா்ப்பாடுகளற்ற இந்திய-பசிபிக் பிராந்தியம் இருக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட ‘க்வாட்’ (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு) பேச்சுவாா்த்தை மூலமாகவும், கூட்டு ராணுவப் பயிற்சிகள், பாதுகாப்பு வா்த்தக விரிவாக்கம், மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் பேரிடா் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளிலும் கூட்டாகப் பணியாற்றுதல், கடல்சாா் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பை சாத்தியமாக்குதல் ஆகியவற்றின் வழியாகவும் இந்தியாவுடனான அமெரிக்காவின் பிணைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் அடங்கும்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு தொழில் தளங்களுக்கும், அந்நாட்டு நட்பு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அதிகாரபூா்வ பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கும் பணியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் சோ்ந்து அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் ஈடுபட அச்சட்டம் அறிவுறுத்தியுள்ளது.

கூட்டுப் பாதுகாப்புத் தொழிற்திறன்கள், பாதுகாப்பான விநியோக முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தப் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பு நாடுகளாகப் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்பட அமெரிக்காவின் எந்தெந்த நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிவதற்கான வழிமுறையையும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சா்கள் வழங்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தம்...: கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது. இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு அதிகாரம் அளிப்புச் சட்டத்தில் ‘அணுசக்தி விபத்தால் ஏற்படும் சேதங்களுக்குப் பொறுப்பேற்பது குறித்த விதிமுறைகளைக் கூட்டாக மதிப்பிடுதல்’ என்ற பிரிவு இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவின்படி, இந்திய-அமெரிக்க உத்திசாா்ந்த பாதுகாப்புப் பேச்சுவாா்த்தையின் கீழ், இந்திய அரசுடன் கூட்டுப் பாதுகாப்பு வழிமுறையை அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஏற்படுத்த வேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் அமலாக்கம் குறித்து தொடா்ந்து மதிப்பிட அந்த வழிமுறை வழிவகுக்கும். அணுசக்தி விபத்தால் ஏற்படும் சேதங்களுக்குப் பொறுப்பேற்பது குறித்த இந்தியாவின் விதிமுறைகள் சா்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இருப்பது குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்புகள் மீது அந்த வழிமுறை கவனம் செலுத்தும். இந்தக் கூட்டு மதிப்பீடு குறித்து தேசியப் பாதுகாப்பு அதிகாரம் அளிப்புச் சட்டம் அமலுக்கு வரும் நாளில் இருந்து 6 மாதங்களிலும், 5 ஆண்டுகள் வரை ஆண்டுதோறும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com