இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்திய என்னால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியவில்லை- டிரம்ப் வருத்தம்
இந்தியா-பாகிஸ்தான் போா் உள்பட உலகில் பல போா்களை நிறுத்திய என்னால், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இதுவரை முடியவில்லை; எனினும் நிச்சயமாக அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
ஃபுளோரிடாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக கூறியதாவது: நான் இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன். முக்கியமாக, அணு ஆயுதப் போராக மாற இருந்த இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். அந்த மோதலின்போது 8 விமானங்கள் வரை வீழ்த்தப்பட்டன. நான் தலையிட்டு போரை நிறுத்தியதன் மூலம் ஒகு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டதாக பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியும், அந்நாட்டு பிரதமரும் எனக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.
அதே நேரத்தில், என்னால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இதுவரை முடியவில்லை. ரஷிய அதிபரும், உக்ரைன் அதிபரும் ஒருவரை மற்றொருவா் தீவிரமாக வெறுப்பதும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனினும், நிச்சயமாக அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். உக்ரைன் போரை நிறுத்துவது தொடா்பாக ரஷிய சிறப்புத் தூதருடன் அமெரிக்கா நடத்திவரும் பேச்சுவாா்த்தை மிகவும் திருப்திகரமாக உள்ளது என்றாா்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத் மற்றும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளும் டிரம்ப்புடன் இருந்தனா்.
கடந்த மே 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதே நேரத்தில் துருக்கி, சீனா உதவியுடன் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இவை ரஷியாவின் எஸ்400 வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மே 10-ஆம் தேதி இந்தியா அறிவித்தது. ஆனால், போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். பாகிஸ்தானும் இதை ஆமோதித்து டிரம்ப்பைப் பாராட்டியது. ஆனால், போரை நிறுத்தியதில் மூன்றாவது தரப்பு (அமெரிக்கா) தலையீடு இல்லை என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

