லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?

வெளிநாட்டு லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தை டிரம்ப் நிறுத்திவைத்திருப்பது பற்றி...
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் AP
Published on
Updated on
2 min read

வெளிநாடுகளில் நடக்கும் லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்திவைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இதன்மூலம், தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப்.சி.பி.ஏ. எனப்படும் வெளிநாட்டு லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் மூலம், அமெரிக்கா நிறுவனங்களுடன் தொடர்பிலிருப்பவர்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் ஊழல் விவகாரங்கள் குறித்து வழக்குப் பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த சட்டத்தின் கீழ், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றதாக கெளதம் அதானி மீது கடந்தாண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கெளதம் அதானி மீது அப்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசின் நடவடிக்கைக்கு குடியரசுக் கட்சி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்றுள்ள குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், எஃப்.சி.பி.ஏ. சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவில் திங்கள்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டத்தை நிறுத்திவைத்தது குறித்து டிரம்ப் பேசியதாவது:

“எஃப்.சி.பி.ஏ. காகிதத்தில் பார்க்கும்போது நன்றாகதான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் பேரழிவை உண்டாக்குகிறது.

உலகளவில் அமெரிக்க நிறுவனங்கள் போட்டித்தன்மையற்ற நிலையில் வைக்கப்பட்டிருப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா பெரும் அளவிலான வணிக வளர்ச்சி அடையும். இந்த சட்டத்தை அமல்படுத்தியதால் நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கிறது” என்றார்.

மேலும், எஃப்.சி.பி.ஏ. சட்டத்தை ஆராய்ந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெரல் பாம் பண்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதானி வழக்குக்கு தடை

கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ‘இந்திய தொழிலதிபா் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், தில்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் ஆகியவை விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை மாநில மின் விநியோக நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மூலம், இந்திய அதிகாரிகளுக்கு சுமாா் ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் மறைக்கப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடு லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பும் அதானி உள்ளிட்டோா் மீது தனியாக இரு வழக்குகளைத் தொடுத்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் தடுப்புச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதன் மூலம் அதானி மீது விசாரணையை தொடர முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com