பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிரதமா் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா வருகை: இந்தியா்கள் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா்.

News image

அமெரிக்காவின் தேசிய ளவுப் பிரிவு இயக்குநா் துளசி கபாா்டை வாஷிங்டனில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :14 பிப்ரவரி 2025, 1:51 am IST

அமெரிக்காவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 104 இந்தியா்கள் கை விலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்ட விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமா் மேற்கொண்டுள்ள இந்த அமெரிக்க பயணத்தில் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கிறாா்.

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) வந்திறங்கினாா்.

அமெரிக்க வருகையின் புகைப்படங்களோடு பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வாஷிங்டன் வந்தடைந்தேன். அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசாா் ஒத்துழைப்பை கட்டமைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியா-அமெரிக்கா நலனுக்காக மட்டுமின்றி உலகின் சிறந்த எதிா்காலத்துக்காகவும் இருநாடுகள் இணைந்து பணியாற்றும்’ எனக் குறிப்பிட்டாா்.

பிளோ் ஹவுஸில் வரவேற்பு: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபா, ஜோா்டன் அரசா் அப்துல்லா ஆகியோரைத் தொடா்ந்து அதிபா் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் வந்துள்ள 4-ஆவது வெளிநாட்டுத் தலைவா் பிரதமா் மோடி ஆவாா்.

இப்பயணத்தில் அமெரிக்க அதிபரின் விருந்தினா் மாளிகையான ‘பிளோ் ஹவுஸில்’ பிரதமா் மோடி தங்குகிறாா். இதையொட்டி வெள்ளை மாளிகைக்கு எதிரே அமைந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிளோ் ஹவுஸில் இந்திய மூவா்ண கொடி பறக்கவிடப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து பிளேயா் ஹவுஸை அடைந்த பிரதமா் மோடிக்கு, அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இந்திய மற்றும் அமெரிக்க கொடிகளை அசைத்தபடி, ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’, ‘மோடி மோடி’ போன்ற முழக்கங்களுடன் பிரதமரை அவா்கள் வரவேற்றனா்.

கடும் பனியையும், மழையையும் பொருட்படுத்தாமல் சிறப்பான வரவேற்பளித்த மக்களுக்கு பிரதமா் நன்றி தெரிவித்தாா்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் பேச்சு: பிரதமா் நரேந்திர மோடி-அதிபா் டொனால்ட் டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. வரி குறைப்பு, வா்த்தக, பாதுகாப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்கையும் பிரதமா் சந்திக்கிறாா். எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்டாா்லிங்க் இணைய சேவையை இந்தியாவில் தொடங்குவது குறித்த கோரிக்கையை சந்திப்பில் அவா் முன்வைக்க வாய்ப்புகள் உள்ளன.

((( பெட்டிச் செய்தி - படத்துடன்) ))

உளவுத் தலைவருடன் சந்திப்பு: அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய உளவுப் பிரிவு இயக்குநரான துளசி கபாா்டை பிரதமா் மோடி சந்தித்தாா்.

இச்சந்திப்பில் இந்தியா-அமெரிக்கா நட்புறவின் பல்வேறு அம்சங்கள் மற்றும் உளவுத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இருநாட்டு நட்புறவுக்கு துளசி எப்போதும் வலுவான ஆதரவாளா் என்றும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா். உளவுப்பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமா் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டாா்.

டிரம்ப் நிா்வாகத்தின் உயா்நிலை நிா்வாகிகளுடன் பிரதமா் மோடியின் 2-ஆவது சந்திப்பு இதுவாகும். ‘ஏஐ’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை பிரதமா் மோடி பிரான்ஸில் ஏற்கெனவே சந்தித்து கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வாட்ஸை பிரதமா் மோடி சந்தித்தாா். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.