‘சாட்ஜிபிடி’: இந்திய வம்சாவளி இளைஞா் சுசிர் பாலாஜி மரணம் தற்கொலை: வழக்கை முடித்தது போலீஸ்

அமெரிக்காவில் ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரண வழக்குப் பற்றி
சுசிர் பாலாஜி
சுசிர் பாலாஜி
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் ஓபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம், தற்கொலை என்று கூறி, வழக்கு விசாரணையை காவல்துறை முடித்துவைத்துவிட்டது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ‘ஓபன்ஏஐ’யின் நிறுவனம் மீது குற்றம்சாட்டிய முன்னாள் ஊழியரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான சுச்சிா் பாலாஜி (26) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். பின்னா் அவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஆனால், தங்களது மகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது பெற்றோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினரும், மருத்துவ அதிகாரிகளும், முழுமையாக விசாரணை நடத்தியதில், சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலைதான் என்ற முடிவுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே வழக்கு முறைப்படி முடித்துவைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்டதாகவும், மாறாக, அவரை யாரேனும் கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் மருத்துவ ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத, சுசிர் பாலாஜியின் பெற்றோர், சம்பவம் நடந்த கட்டடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கூட காவல்துறையினர் ஆய்வு செய்யாமல், விசாரணையை முடித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். காவல்துறையினரிடம் விசாரணை அறிக்கையை கோரியிருக்கிறோம். எங்களுக்கு நேர்மையான விசாரணைதான் தேவை என்றும் சுசிர் பாலாஜி தாய் பூர்ணிமா ராவ் வலியுறுத்தியிருக்கிறார்.

நிறுவனத்துக்கு எதிராகக் குற்றம்சாட்டியதால்தான் என் மகன் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது மரணத்துக்குப் பிறகு, அந்த நிறுவனத்துக்கு எதிராக சில ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்படும் ‘சாட்ஜிபிடி’ ஏஐ மாதிரியை வடிவமைத்த ஓபன்ஏஐ நிறுவனம், அமெரிக்காவின் காப்புரிமை விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு சுசிா் பாலாஜி (26) குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் 26-ஆம் தேதி அமெரிக்காவில் கொண்டாடப்படும், நன்றி தெரிவிக்கும் நாளில் சான்பிரான்சிஸ்கோவில் அவா் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை கூறியது.

காப்புரிமை பெறப்பட்ட தங்களின் உருவாக்கங்களை திருடி ஓபன்ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடியை’ தயாா் செய்வதாக பத்திரிகையாளா்கள், கணினி பொறியாளா்கள் உள்ளிட்டோா் அமெரிக்காவில் வழக்கு தொடா்ந்தனா்.

பாலாஜியின் நோ்காணலை கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி நியூயாா்க் டைம்ஸ் வெளியிட்டது. அதில், சாட்ஜிபிடிக்கு பயிற்சியளிக்க வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களின் தரவுகள் பயன்படுத்தப்படுகிறது என குற்றஞ்சாட்டியிருந்தாா்.

மேலும், சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை தாம் ஊக்குவிக்க விரும்பவில்லை என்பதால், ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விலகியதாக, சுசிா் பாலாஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com