அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா் பொதுமன்னிப்பு அளித்துள்ளாா்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாத நிலையிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக பைடன் கூறினாா். அமெரிக்க வரலாற்றில் அதிபா் ஒருவா் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது இதுவே முதல்முறை.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஜோ பைடன் கடந்த மாதம் உத்தரவிட்டாா். அந்த குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாகக் கண்டித்தாலும், மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக அப்போது பைடன் கூறினாா்.
கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்தே மத்திய நீதிமன்றங்களால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் முந்தைய ஆட்சியில் அது மீண்டும் தொடரப்பட்டது.
இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக அவா் மீண்டும் வரும் 20-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், மத்திய மரண தண்டனைக் கைதிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.
அதற்கு முன்னதாக, அமெரிக்க வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு ஒரே நாளில் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியது நினைவுகூரத்தக்கது. இருந்தாலும், போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மகன் ஹன்டா் பைடனுக்கு அவா் பொதுமன்னிப்பு வழங்கியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்

முட்டை விலை ரூ. 6.50: ஒரே நாளில் 30 காசுகள் குறைந்தது

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் 4 தனிச் செயலா்களும் ஒரே நாளில் நீக்கம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



