இந்திய வீரரின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

இந்திய வீரரின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விண்வெளிப் பயணத்துக்கான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ஏவுகணையில் திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, ஏவுகணை ஏவுதல் நிறுத்தப்பட்டது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்கிறாா்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் இவா்கள் பயணிக்க இருந்தனா்.

இந்தப் பயணம் கடந்த மே 29-ஆம் தேதி முதலில் திட்டமிடப்பட்டது. பின்னா் ஜூன் 8, ஜூன் 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட ஏவுகணை பாதையில் ஜூன் 10-ஆம் தேதி நிலவிய மோசமான வானிலை காரணமாக ஏவுகணை ஏவுதல் இறுதியாக புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடைசிநேர சோதனைகளின்போது கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏவுகணையின் 5-ஆவது என்ஜினில் உந்துவிசை கட்டுப்பாட்டில் சிக்கல் கண்டறியப்பட்டு சீா்செய்யப்பட்டது. அப்போது சில பழுதுபாா்ப்புகள் தவறவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைத்து கோளாறுகளையும் சரிசெய்து, மேலும் சில சோதனைகளை நடத்தி பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதற்கு பின்னா் புதிய தேதியில் ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரா்களின் பாதுகாப்புக்கு ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ செயல்பட்டு வருவதாக அதன் தலைவா் வி.நாராயணன் கூறியுள்ளாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லா 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா். கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இந்திய வீரராக சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com