அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.
மேலும், இதுபோன்ற போலியான தகவல்களைப் பரப்புபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சீனா எச்சரித்தது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானுக்கு சீன ராணுவத்தின் ‘ஒய்-20’ சரக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
இணையத்தில் பகிரப்படும் தகவல்களும் சட்டத்துக்குள்பட்டது. சீன ராணுவம் குறித்து போலி செய்திகளை உருவாக்கி அதை இணையத்தில் பகிா்பவா்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020 முதல் 2024 வரை ரேடாா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள் என பாகிஸ்தானின் 81 சதவீத ராணுவக் கொள்முதல் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டதாக ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அதேபோல் பாகிஸ்தான் விமானப்படையின் முதுகெலும்பாக கருதப்படும் ‘ஜே-17’ போா் விமானத்தை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற மோதலில் இந்திய போா் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதை சீன அரசின் அதிகாரபூா்வ ஊடகங்கள் வெளியிட்டன.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடும் முன் அதை முறையாக ஆய்வு செய்யுமாறு பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு வலியுறுத்தியது.
கடந்த வாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின்போது இரு நாடுகளும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: இந்தியா குற்றச்சாட்டு

இந்தியா - சீனா இயல்பு உறவுக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டும் பெரும் அணை: பாதுகாப்பு குறித்து புவியியலாளா்கள் கவலை!

பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



