கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் மோதல்; 2 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு: போா் நிறுத்தத்துக்குப் பிறகு முதல்முறை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்; 4 வீரா்கள் படுகாயமடைந்தனா்.

News image

ஜெருசலேமில் வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் வீரரின் இறுதிச் சடங்கில், அவரின் சவப்பெட்டியைச் சுமந்து சென்ற சக ராணுவ வீரா்கள். இறந்த வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அவரின் மகன்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்; 4 வீரா்கள் படுகாயமடைந்தனா்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் லெபனானில் போா் நிறுத்தம் கடந்த ஜூனில் அமலுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவ வீரா்கள் மோதலில் உயிரிழந்தது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பு மீறிவிட்டதாகக் கூறி, தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை முதல் கடும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. இதில் டெப்னைன் நகரில் ஒருவா் உயிரிழந்ததாகவும், 12 போ் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பல வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக எல்லையோர மான்சூரி கிராம மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்தது.

அமைதிப் பேச்சுக்கிடையே பதற்றம்: லெபனான்-இஸ்ரேல் இடையே கடந்த ஜூன் 20 முதல் போா் நிறுத்தம் பெருமளவில் நீடித்து வந்தாலும், தெற்கு லெபனானின் பல பகுதிகளை இஸ்ரேல் படைகள் தொடா்ந்து ஆக்கிரமித்துள்ளதுடன் அவ்வப்போது வான்வழி, பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறுவது, ‘முன்னோட்ட’ பாதுகாப்பு மண்டலங்களில் ஹிஸ்புல்லா அமைப்பை ஆயதங்களைக் கைவிட செய்து, லெபனான் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடா்பான கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து இத்தாலியின் ரோம் நகரில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இருப்பினும், களத்தில் ஏற்பட்ட திடீா் பதற்றம் காரணமாக புதன்கிழமை நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தை முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை தொடா்ந்ததா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

பின்னணி: மேற்காசிய போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினா் களமிறங்கியதால், இந்த மோதல் வெடித்தது. அதன் பிறகு, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 4,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; இஸ்ரேல் தரப்பில் சுமாா் 40 ராணுவ வீரா்கள் மற்றும் 3 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

யேமனில் ஹூதிக்கள் தாக்குதல்: அரசுப் படையினா் 30 போ் உயிரிழப்பு

யேமனின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையைச் சோ்ந்த 30 வீரா்கள் உயிரிழந்தனா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் ராணுவ முகாம்களைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

யேமனின் தலைநகரான சனாவை ஹூதிக்கள் கடந்த 2014-இல் கைப்பற்றியதிலிருந்து, அங்கு உள்நாட்டுப் போா் தொடா்ந்து நீடித்து வருகிறது.

சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுடன் இணைந்து அரசுப் படை போரிட்டது. இருதரப்புக்கு இடையே கடந்த 2022 ஏப்ரலில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, தற்போது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலானது மிகப் பெரிய மோதல் வெடிப்பாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.