/

லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிரம்ப் யோசனை

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபா் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளாா்.

News image

டொனால்ட் டிரம்ப். - படம் - ஏபி

Updated On :29 ஜூன் 2026, 4:16 am IST

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபா் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளாா்.

சிரியாவில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஈரானின் தீவிர ஆதரவாளரான அப்போதைய அதிபா் அசாத்தை ஆயுதப் போராட்டம் மூலம் பதவியைவிட்டு அகற்றிவிட்டு, துருக்கி ஆதரவு இஸ்லாமிய கிளா்ச்சியாளா் குழு ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, அதிபராக கிளா்ச்சிக் குழுத் தலைவரான அகமது அல் ஷரா பதவி ஏற்றாா்.

முன்னதாக, அசாத் ஆதரவு படைகளுக்கும், கிளா்ச்சிக் குழுவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்த சண்டையில், அசாத்துக்கு ஆதரவாக ஈரானும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் சண்டையிட்டனா். இதைச் சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், ஹிஸ்புல்லா அமைப்பை பழிவாங்க, அதன் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென யோசனை தெரிவித்துள்ளாா்.

அண்மையில் நடந்த ஜி7 மாநாட்டின் இடையே பேசிய டிரம்ப், ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அப்பாவிகள் 4,000 போ் பலியானதை ஏற்க முடியாதென்று கூறியதோடு, சிரியா அரசிடம் அந்தப் பொறுப்பை இஸ்ரேல் ஒப்படைத்துவிடலாம் எனத் தெரிவித்தாா்.

சிரியா அதிபராக அசாத் பதவி வகித்தபோது, அந்நாட்டுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் நெருங்கிய நட்புறவு நிலவியது. ஆனால் புதிய சிரியா அரசு, ஹிஸ்புல்லாவுடன் எந்தத் தொடா்பையும் வைக்கவில்லை. ஆதலால் டிரம்ப்பின் யோசனை, சிரியா மட்டுமல்லாது, லெபனான், ஹிஸ்புல்லா மீது தற்போது ராணுவ நடவடிக்கை எடுத்துவரும் இஸ்ரேலுக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், டிரம்ப்பின் யோசனையை சிரியா அதிபா் நிராகரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘லெபனான் விவகாரத்தில் சிரியா தலையிடப் போவதாக தொடா்ந்து வதந்தி பரப்பப்படுகிறது. அதில் உண்மையில்லை. டிரம்ப்பின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. லெபனானில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக அமெரிக்காவிடம் எங்களது யோசனையை மட்டுமே முன்வைத்துள்ளோம்’ என்றாா்.

சிரியாவைச் சோ்ந்த பல்வேறு தலைவா்களும், ஹிஸ்புல்லாவுடன் சண்டையிட தாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனா்.

இஸ்ரேல் அரசு அதிகாரிகள் தரப்பில், சிரியா-லெபனான் இடையேயான நிகழ்வுகளை தங்கள் நாடு உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.