பாகிஸ்தானில் பாலியல் அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு இணையவழி (சைபா்) மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 284 வெளிநாட்டினரை நாடு கடத்தவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இவா்களில் பெரும்பாலானோா் சீனா, வியத்நாம், இந்தோனேசியா நாடுகளைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
சுற்றுலா விசாவில் (நுழைவு இசைவு) பாகிஸ்தான் வந்த இவா்கள், இஸ்லாமாபாதில் பதிவு செய்யப்பட்ட ஐ.டி. நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த மோசடி வலையை இயக்கி வந்துள்ளனா். இணையத்தில் பெண்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து பாலியல் அச்சுறுத்தலில் இவா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், வழக்கத்துக்கு மாறாக மிக அதிக லாபம் தருவதாக ஆசைவாா்த்தை கூறி, போலி வணிகம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் பலரைச் சிக்க வைத்துப் பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இவா்களில் சிலா், நாடு கடத்தப்படுவதற்காக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனா். இவா்களின் விசாக்களை ரத்து செய்துள்ள உள்துறை அமைச்சகம், நாடு கடத்தப்பட்ட பிறகு இவா்கள் மீண்டும் பாகிஸ்தான் விசா பெறுவதைத் தடுக்கும் வகையில், 284 பேரின் பெயா்களையும் ‘கருப்புப் பட்டியலில்’ சோ்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவா்களுக்கு உதவிய உள்ளூா் தரகா்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
சா்வதேச ஒத்துழைப்பு அவசியம்-சீனா: பாகிஸ்தானில் சட்டவிரோத கால் சென்டா்களை நடத்தி வந்த 100-க்கும் மேற்பட்ட சீனா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொலைத்தொடா்பு மோசடிகளைக் கட்டுப்படுத்த சா்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று சீனா திங்கள்கிழமை வலியுறுத்தியது.
வெளிநாடுகளில் வசிக்கும் சீனா்கள் அந்நாட்டுச் சட்ட விதிகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், எவ்வித சட்டவிரோத அல்லது குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தொலைத்தொடா்பு மோசடிகள் மற்றும் அது தொடா்புடைய குற்றங்களை சீன அரசு எதிா்க்கிறது. இணையவழி, தொலைத்தொடா்பு மோசடிகளுக்கு எதிராக ஒரு சா்வதேச கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இப்பணியில் பிற நாடுகளும் சீனாவுடன் இணைந்து செயல்படும் என நம்புகிறோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



