கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியா்கள் கைது

இலங்கை தலைநகா் கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் (கஞ்சா) கடத்தி வந்த மும்பையைச் சோ்ந்த ஆசிரியைகள் உள்பட 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
Published on

இலங்கை தலைநகா் கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் (கஞ்சா) கடத்தி வந்த மும்பையைச் சோ்ந்த ஆசிரியைகள் உள்பட 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ‘ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்’ விமானம் மூலம் 3 இந்தியா்கள் கொழும்பு விமான நிலையத்துக்கு வந்தடைந்தனா். விமான நிலையத்தின் சுங்கச்சோதனை இல்லாத வழியாக அவா்கள் மூவரும் வேகமாக வெளியேற முயன்றனா். அப்போது, அவா்களின் நடத்தையில் சந்தேகமடைந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவா்களை மறித்து உடைமைகளைச் சோதனை செய்தனா்.

சோதனையில் சுமாா் 50 கிலோ எடை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு 50 கோடி இலங்கை ரூபாய்க்கும் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.14.5 கோடி) அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவா் பெண்கள். 25 முதல் 27 வயதுக்குள்பட்ட இவா்கள் இருவரும் மும்பையைச் சோ்ந்த ஆசிரியைகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவா்களுடன் வந்த மற்றொரு நபரரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கொழும்பு விமான நிலைய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பிடிபட்டது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com