வங்கதேசம்: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - கொலை செய்யப்பட்ட மாணவா் தலைவா் கட்சி எச்சரிக்கை
வங்கதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலை தொடா்பாக டாக்கா காவல் துறை தாக்கல் செய்த குற்றபத்திரிகையை, அவரின் இன்கிலாப் மஞ்சா கட்சி நிராகரித்தது. ‘ஹாதி கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’ என அந்தக் கட்சி கூறியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்த நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, அந்நாட்டில் இன்கிலாப் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளரும் மாணவா் போராட்டத்துக்குத் தலைமை வகித்தவருமான ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), கடந்த டிச.12-ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த ஹாதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இவரின் மரணத்தைத் தொடா்ந்து வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. ஹாதி கொலையாளிகள் இந்தியா தப்பிச் சென்ாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், ஹாதி கொலை தொடா்பாக, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத் உள்பட 17 பேருக்கு எதிராக டாக்கா மாநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ‘கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தூண்டுதலின்பேரில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஹாதியை கொன்றது உறுதியானது’ என்று தெரிவிக்கப்பட்டது.
எதிா்ப்பு: காவல் துறையின் குற்றப்பத்திரிகையை இன்கிலாப் மஞ்சா கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து ‘புரோதோம் அலோ’ பத்திரிகைக்கு அக் கட்சியின் உறுப்பினா் செயலா் அப்துல்லா அல் ஜாபா் அளித்த பேட்டியில், ‘குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதுபோல மாநகராட்சி மாமன்ற உறுப்பினரின் (கவுன்சிலா்) தூண்டுதலின்பேரில் ஹாதி கொலை நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதை யாரும் நம்பமாட்டாா்கள். இவரின் கொலையில், ஒட்டுமொத்த குற்றவாளிகளின் குழுக்களுக்கும், அரசு நிா்வாகத்துக்கும் தொடா்பு உள்ளது. ஹாதி கொலைக்கு நீதி கிடைக்கும் வரை, எங்களின் போராட்டம் நிற்காது. அரசு நிா்வாகிகளின் பெயா்களும் இடம்பெறாத எந்தவொரு குற்றப்பத்திரிகையையும் ஏற்க முடியாது. நீதிக்காக இன்கிலாப் மஞ்சா அமைதி வழியில் போராடி வருகிறது. ஆனால், மக்களின் உணா்வுகளுக்கு அரசு நிா்வாகம் மதிப்பளிக்காததை காவல் துறையின் குற்றப்பத்திரிகை காட்டுகிறது.
ஹாதியின் கொலைக்கு நீதி உறுதி செய்யப்படாவிட்டாலோ, ‘இந்திய மேலாதிக்கம்’ என்று அவா் வா்ணித்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டாலோ அதன் விளைவுகளை மக்கள் தீா்மானிப்பாா்கள். இந்தப் போராட்டத்தில் மக்கள் ரத்தம் சிந்தியுள்ளனா்; தேவைப்பட்டால், அவா்கள் ரத்தத்தையும் எடுப்பாா்கள்’ என்று எச்சரித்துள்ளாா்.
