~(வட்டத்துக்குள்) துப்பாக்கிச்சூடு நடத்தும் ஐசிஇ காவலா். (உள்படம்) கொல்லப்பட்ட ரெனீ நிக்கோல் மேக்ளின் குட்.
~(வட்டத்துக்குள்) துப்பாக்கிச்சூடு நடத்தும் ஐசிஇ காவலா். (உள்படம்) கொல்லப்பட்ட ரெனீ நிக்கோல் மேக்ளின் குட்.

அமெரிக்கா: குடியேற்ற காவலரால் பெண் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலா் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்ததாா்.
Published on

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலா் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்ததாா்.

நகரின் மையப் பகுதிக்கு தெற்கே குடியிருப்புப் பகுதியில் எஸ்யுவி வாகனத்தில் அந்தப் பெண் வந்துகொண்டிருந்தபோது அதை தடுத்து நிறுத்திய ஐசிஇ காவலா்கள், காரின் கதவைத் திறக்க முயன்றனா். இருந்தாலும், அந்த வாகனத்தை சிறிது பின்னோக்கிச் செலுத்திவிட்டு, அவா்களிடமிருந்து தப்பிச் செல்லும் வகையில் வாகனத்தை வலதுபுறமாகத் திருப்பிச் செல்ல மேக்ளின் குட் முயன்றதும், ஒரு ஐசிஇ காவலா் துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி பல முறை சுடும் காட்சியும் அங்கிருந்த கண்காணிப்பு விடியோக்களில் பதிவாகி, சமூக ஊடங்களில் வெளியாகின.

அந்த விடியோவைக் கொண்டு, ஐசிஇ காவலா்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல மேக்ளின் குட் முயன்ாகவும், தற்காப்புக்காகத்தான் அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியிருந்ததாகவும் டிரம்ப் ஆதரவாளா்களும், அதிகாரிகளும் கூறினா்.

இது ஐசிஇ காவலா்கள் மீதான ‘உள்நாட்டு பயங்கரவாதம்’ என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் கிறிஸ்டி நோம் குற்றஞ்சாட்டினாா்.

இருந்தாலும், வாகனம் அதிகாரியை மோதியதா என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை. மேக்ளி குட் அங்கிருந்து தப்பிச் செல்ல காவலா்களிடமிருந்து காரை விலக்கித்தான் சென்றாா், அவரை சுட்டுக் கொன்றது படுகொலை என்றும் எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கிறிஸ்டி நோமின் கருத்தை மினியாபொலிஸ் நகர மேயா் ஜேக்கப் ஃப்ரே கடுமையாகச் சாடினாா். சம்பவம் தொடா்பான விடியோவைப் பாா்த்ததாகவும், அது தற்காப்புக்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவா் கூறினாா்.

டிரம்ப் அரசின் குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக மினசோட்டாவில் 2,000-க்கும் மேற்பட்ட ஐசிஇ காவலா்கள் அனுப்பப்பட்டு, சுமாா் 1,500 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில் பெண் ஒருவா் ஐசிஇ காவலரால் சுட்டக் கொல்லப்பட்டது நகரில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானவா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com