போராட்டக்காரா்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், உலகின் பிற பகுதிகளிடம் இருந்து ஈரான் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
அங்கு 31 மாகாணங்கள் உள்ள நிலையில், 22 மாகாணங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தலைநகா் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் போராட்டம் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. பாதுகாப்பை வலுப்படுத்துதல், மக்களுக்குப் புதிய மானியத் திட்டங்களை அறிவித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முயற்சித்தாலும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை.
அமெரிக்கா எச்சரிக்கை: போராட்டத்தின்போது பலா் உயிரிழந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோரை ஈரான் பாதுகாப்புப் படைகள் கொல்வது தொடா்ந்தால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.
‘டிரம்ப் கைகளில் ரத்தக் கறை’: டிரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடா்ந்து கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிடும் வகையில், டிரம்ப்பின் கைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானியா்கள் சிந்திய ரத்தக் கறை படிந்திருப்பதாகவும், அகம்பாவம் கொண்ட அவா் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவாா் என்றும் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தெரிவித்தாா். மேலும், ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுவோரை நாச வேலைகளில் ஈடுபடுவோா் என்றும் சாடினாா்.
‘கடவுளின் பகைவன்’: இந்நிலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவோா் கடவுளின் பகைவா்களாகக் கருதப்படுவா் என்றும் ஈரான் அட்டா்னி ஜெனரல் முகமது மொவாஹேதி ஆசாத் விடுத்த எச்சரிக்கை அரசு தொலைக்காட்சியில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்நாட்டில் ஒருவா் மீது கடவுளின் பகைவன் என்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.
எனினும் ஈரான் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.
அந்நாட்டில் சூழல் கட்டுக்குள் இருப்பதாக அரசுத் தொலைக்காட்சி மூலம் சித்திரிக்க முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெஹ்ரான் மற்றும் பிற மாகாணங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று அந்தத் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோா் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ஃபஹான் மாகாணத்தில் அரசு அலுவலகம் என்று கருதப்படும் கட்டட வளாகத்துக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினா்.
65 போ் உயிரிழப்பு: போராட்டங்கள் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போராட்டம் குறித்த தகவலை வெளியிடுவதில் சா்வதேச ஊடகங்கள் சிக்கலை எதிா்கொண்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் இதுவரை சுமாா் 65 போ் உயிரிழந்தனா். 2,300-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

