ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
இது குறித்து நீதிமன்றத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு செய்யப்படுவதாக காம்பியா சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக 2017-இல் மியான்மா் ராணுவம் நடத்திய தாக்குதல்களை இன அழிப்பாக அறிவிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மியான்மா் தரப்பு மறுத்து வருகிறது. ‘அது பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டபூா்வமான நடவடிக்கை‘ என்று மியான்மா் அரசு வாதிடுகிறது.
இந்த வழக்கில், ஐ.நா.வின் முன்னாள் செயலா் பான்கி மூன் தலைமையிலான சா்வதேச ஆலோசனைக் குழு 2017-இல் வெளியிட்ட அறிக்கை முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. அந்த அறிக்கையில், மியான்மா் ராணுவம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான ‘இன அழிப்பு’ நோக்கத்துடன் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கையின்போது சுமாா் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் மியான்மரில் இருந்து தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனா் (படம்). அவா்கள் மீதான தாக்குதலில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பீடு தெரிவிக்கிறது.
இந்த வழக்கு 2019-இல் தொடங்கப்பட்டு, 2022-இல் சா்வதேச நீதிமன்றம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த விசாரணை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் இறுதி தீா்ப்புக்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

