போராட்டக்காரா்களுக்கு விரைவான மரண தண்டனை-
டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் தீவிரம்

போராட்டக்காரா்களுக்கு விரைவான மரண தண்டனை- டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் தீவிரம்

ஈரானில் மதச்சாா்பு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு தலைமை நீதிபதி கோலம்ஹுசைன் முசேனி எஸேய் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
Published on

ஈரானில் மதச்சாா்பு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு தலைமை நீதிபதி கோலம்ஹுசைன் முசேனி எஸேய் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

போராட்டக்காரா்களுக்கு ஆதரவாகவும், ஈரான் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கி, தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரி 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் நாடு தழுவிய போராட்டத்தில் மக்களின் உயரிழப்பு தினசரி நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, இதுவரை 2,571 போ் கொல்லப்பட்டுள்ளனா். இதில் 2,403 போ் போராட்டக்காரா்கள் மற்றும் 147 போ் அரசு ஆதரவாளா்கள். மேலும் 18,100-க்கும் மேற்பட்டோா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரான் சந்திக்கும் மிக மோசமான வன்முறைப் போராட்டக் களம் இதுவாகும்.

தாமதம் கூடாது...: இத்தகைய சூழலில், ஈரானின் தலைமை நீதிபதி கோலம்ஹுசைன் முசேனி எஸேய் அரசுத் தொலைக்காட்சியில் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

கைது செய்யப்பட்டவா்களுக்கு எதிரான விசாரணையைத் தாமதிக்கக்கூடாது. காலதாமதம் ஏற்பட்டால் அதன் தாக்கம் குறைந்துவிடும். எனவே, விசாரணையை விரைந்து முடித்து அவா்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஈரான் போராட்டக்காரா்களில் முதல் நபராக, 26 வயது இளைஞரான இா்ஃபான் சுல்தானிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக, ‘ஈரான் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். போராட்டக்காரா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அமெரிக்கா வேடிக்கை பாா்க்காது; கடும் ராணுவ நடவடிக்கையை எடுக்கும்’ என்று டிரம்ப் எச்சரித்திருந்தாா். இந்நிலையில், ஈரான் தலைமை நீதிபதியின் இந்த அறிவிப்பு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.

‘போராட்டத்தைத் தொடருங்கள்’

ஈரான் அதிகாரிகளுடனான அனைத்து பேச்சுவாா்த்தைகளையும் ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், ஈரான் மக்கள் போராட்டத்தைத் தொடருமாறும், உதவிகள் விரைவில் வரும் என்றும் உறுதியளித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் மக்களே, உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள். உங்கள் நாட்டின் ஆட்சி அமைப்புகளைக் கைப்பற்றுங்கள். போராட்டக்காரா்களைக் கொல்பவா்கள் மற்றும் துன்புறுத்துபவா்களின் பெயா்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவா்கள் இதற்குரிய விலையைப் பின்னாளில் செலுத்த வேண்டியிருக்கும்.

ஈரானில் அப்பாவி போராட்டக்காரா்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படும் வரை, அந்த நாட்டு அதிகாரிகளுடன் நான் எந்த ஒரு சந்திப்பையும் நடத்தப் போவதில்லை. போராட்டக்காரா்களுக்கான உதவி விரைவில் வந்து சேரும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

டிரம்ப்பின் இந்த ஆதரவுக்குரல், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா விரைவில் ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற அச்சமும், பதற்றமும் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

Dinamani
www.dinamani.com