

இந்திய வம்சாவளிப் பெண் கைது: அமெரிக்காவில், 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியதர்ஷினி நடராஜன் என்ற பெண் அவரது கணவர், 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 13) மாலை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிரியதர்ஷினியின் கணவர் அவர்களது இரண்டு மகன்களும் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அவர் அமெரிக்க காவல் துறையினரின் அவசர உதவி எண்ணான “911”-க்கு அழைப்பு விடுத்து தங்களது குழந்தைகள் இருவரையும் தனது மனைவி ஏதோ செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்களது வீட்டுக்கு விரைந்த காவல் துறையினர் குழந்தைகள் இருவரும் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில், மகன்கள் இருவரையும் கொலை செய்ததாகக் கூறி அவர்களது தாயான பிரியதர்ஷினி நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களது வீட்டில் காவல் துறை மற்றும் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தடயங்களைக் கைப்பற்றி வருகின்றனர்.
இருப்பினும், கொல்லப்பட்ட குழந்தைகள் இருவரின் உடல்களும் கூராய்வுச் சோதனை செய்யப்பட்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்ட முறை மற்றும் அதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.