

சிலி நாட்டில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிலியின் வனத்துறை அமைப்பு கூறுகையில்,
நாடு முழுவதும் 24 இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் நுப்ளே மற்றும் பயோபியோ பிராந்தியங்களில் அந்நாட்டு அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. இந்த பிராந்தியங்கள் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து சுமார் 500 கி.மீ.(310 மைல்) தெற்கே அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதிகள் தீயில் எரிந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 2 பிராந்தியங்களிலும் கிட்டத்தட்ட 8,500 ஹெக்டேர் (21,000 ஏக்கர்) நிலப்பரப்பு தீக்கிரையாக்கியுள்ளது.
பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை உள்ளிட்ட பாதகமான சூழ்நிலைகள், காட்டுத் தீ பரவ காரணமாக அமைந்தது. தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. சிலியின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது.
தென் அமெரிக்க நாடான சிலியில், வறட்சி மற்றும் வெள்ளம் உள்பட காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், சமீபத்திய ஆண்டுகளில் சிலியின் தென்-மத்திய பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.