

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பின் (யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ.) தலைமை அலுவலகத்தை புல்டோசரால் இடிக்கும் பணிகளை இஸ்ரேல் அரசு துவங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காஸா மற்றும் மேற்கு கரை பகுதியில், இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் கட்டாய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை உதவிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கி வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் அரசு நீண்டகாலமாகக் குற்றாம்சாட்டி வருகின்றது.
மேலும், அந்த அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய சட்டங்களை இஸ்ரேல் அரசு நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தை இன்று (ஜன. 20) முற்றுகையிட்ட இஸ்ரேல் படைகள் அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றி அந்த வளாகத்திலுள்ள கட்டடங்களை புல்டோசரால் இடிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான தாக்குதல் என்றும் சர்வதேச சட்டமீறல் என்றும் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கூறுகையில், ஹமாஸ் படைக்கு அந்த அமைப்பு உதவி வருவதாகக் குற்றம்சாட்டிய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலின் புதிய சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.
இத்துடன், இந்த நடவடிக்கையானது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிர் தலைமையில் நடைபெற்ற நிலையில், அவர் இது இஸ்ரேலின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள் எனக் கூறியுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.