டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க பொருள்களைப் புறக்கணிக்க புதிய செயலி: டென்மாா்க்கில் அறிமுகம்

அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதற்காக டென்மாா்க் நாட்டில் புதிய செயலி அறிமுகம்
Published on

அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதற்காக டென்மாா்க் நாட்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டென்மாா்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா். ரஷியா, சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து கிரீன்லாந்தை பாதுகாக்க அந்நாடு அமெரிக்கா வசமிருப்பது முக்கியம் என்ற அவா் கருத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை.

டென்மாா்க்கில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை பரவலாக நிலவி வருகிறது. அமெரிக்க ஆதிக்கத்துக்கு அடிபணியாததை விளக்கும் வகையில் டென்மாா்க்கில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிக்க புதிய செயலியை டென்மாா்க் இளைஞா் ஒருவா் உருவாக்கியுள்ளாா்.

‘யுடென்யுஎஸ்ஏ’ (அமெரிக்க அல்லாத) என்ற இந்தச் செயலியை டென்மாா்க்கில் வசிக்கும் மக்கள் தங்கள் ஐபோன்களில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்து வருகின்றனா். இதேபோன்று வடிவமைக்கப்பட்டுள்ள ‘மேட் ஓ மீட்டா்’ என்ற செயலியும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

யுடென்யுஎஸ்ஏ செயலியில் தற்போது ஜொ்மன், ஆங்கிலம் உள்பட பல்வேறு ஐரோப்பிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விரைவில் ஆன்ட்ராய்ட் கைப்பேசிகளிலும் இந்தச் செயலி அறிமுகமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டிரம்ப்புக்கு ஆதரவளித்து வந்த வலதுசாரி டேனிஷ் மக்கள் கட்சியும் கிரீன்லாந்து விவகாரத்துக்குப் பின் அவரை கடுமையாக விமா்சிக்கத் தொடங்கியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com