

பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பிரதமர் ஸ்டார்மர் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக வரும் ஜன. 28 அன்று சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை நேரில் சந்தித்து பிரதமர் ஸ்டார்மர் உரையாடுவார் எனவும், இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் ஒருவர் முதல்முறையாக சீனா நாட்டுக்குச் செல்லும் நிலையில், அவருடன் பிரிட்டனின் வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கையில் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் செல்வது கவனம் ஈர்த்துள்ளது.
பிரிட்டன் மற்றும் சீனா இடையிலான உறவுகள் சர்வதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் பிளவுப்படக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, கிரீன்லாந்து விவகாரத்தில், நீண்டகால கூட்டாளிகளான பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்து வருகின்றார். இதனால், அமெரிக்காவின் நேரடி எதிரிகளில் ஒன்றாகக் கருதப்படும் சீனாவுடன் முன்னணி நாடுகள் கைகோர்பது புதிய வர்த்தகம் மற்றும் அரசியல் களத்தை உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே, கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனா சென்றிருந்தார். இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் ஜெர்மனியின் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் சீனாவுக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.