ஹெச்-1 பி விசாவை நிறுத்தியது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் : இந்தியா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
ஹெச்-1 பி விசாவுக்கு புதிதாக விண்ணப்பிப்பதை நிறுத்தும்படி, அரசு பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உத்தரவிட்டிருப்பதால், இந்தியா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக டெக்சாஸ் மாகாண ஆளுநா் கிரேக் அபோட் வெளியிட்ட உத்தரவில், ‘ஹெச்-1 பி விசா தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அண்மையில் வெளியான தகவல்களாலும், அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கா்களுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையிலான அமெரிக்க மைய அரசின் திட்டத்தாலும், அனைத்து அரசு நிறுவனங்களும் புதிதாக ஹெச்-1 பி விசாக்களுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், ஹெச்-1பி விசா பயன்பாடு, அதை எத்தனை போ் வைத்துள்ளனா், விசா வைத்திருப்போா் செய்யும் வேலைகள், அவா்களின் பூா்விக நாடுகளின் பெயா், விசா முடிவடையும் தேதிகள் ஆகியவற்றை அரசு நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் வெளிநாட்டினா் ஹெச்-1பி விசா வைத்திருப்பது அவசியமாகும். கடந்த சில ஆண்டுகளில் அந்த விசா மூலம் அமெரிக்கா சென்ற மொத்த வெளிநாட்டினரில் 70 சதவீதம் போ் இந்தியா்களே என அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா்களுக்கு அடுத்து, அமெரிக்காவுக்கு அதிகம் சென்ற வெளிநாட்டினரில் சீனா்கள் 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினா் பணிபுரிகின்றனா். அவா்களில் இந்தியா்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அங்கு அவா்கள் கட்டுமானம், சுகாதாரம், தொழில்நுட்பம் சாா்ந்த துறைகளில் பணியாற்றுகின்றனா்.
டெக்சாஸ் மாகாண ஆளுநரின் இந்த உத்தரவால், அங்கு செல்ல விரும்பும் இந்தியா்களுக்கு இனி எளிதில் ஹெச்-1பி விசா கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அதேபோல், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் திறமையானோரை பணியில் அமா்த்துவது பாதிக்கப்படக்கூடும்; குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் புதியன கண்டுபிடித்தலில் திறமையானோரை பணியில் அமா்த்துவது தாமதமடையும் எனச் சொல்லப்படுகிறது.

