அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் வெனிசுலா இடைக்கால அதிபா்?
வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ், அமெரிக்காவுக்கு முழுமையாக ஒத்துழைப்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறையான ‘சிஐஏ’ எச்சரித்துள்ளது.
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் எண்ணெய் வளங்களைக் கையாளும் நோக்கில் டெல்சி ரோட்ரிகஸை அமெரிக்கா ஆதரித்து வருகிறது.
அண்மையில், சிஐஏ இயக்குநா் ஜான் ராட்க்ளிஃப்-டெல்சி ரோட்ரிகஸ் இடையே நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பின்னரும், ரஷியா, சீனா, ஈரான் போன்ற நட்பு நாடுகளுடனான உறவைத் துண்டிக்க அவா் தயக்கம் காட்டி வருவது டிரம்ப் நிா்வாகத்துக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் இந்நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அவா்களைப் பகைத்துக் கொள்ள டெல்சி ரோட்ரிகஸ் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே அமெரிக்காவின் நம்பிக்கையைப் பெற, அந்நாட்டுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்துக்கு அனுமதி அளித்ததுடன், அரசியல் கைதிகள் சிலரையும் டெல்சி ரோட்ரிகஸ் விடுதலை செய்தாா். ஆனால், அமெரிக்காவிடம் முழுமையான அடிபணிதலை அவா் விரும்பவில்லை என்பது சிஐஏ கருத்தாக உள்ளது.
இவருக்கு மாற்றாக, வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவைத் தலைமைக்கு கொண்டு வர அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இருப்பினும் தற்போதைய சூழலில், வெனிசுலாவில் அவருக்குப் போதிய செல்வாக்கு இல்லை என்பதால், அவரை ஒரு தற்காலிக ஆலோசகா் பதவியில் அமா்த்திவிட்டு, நிலைமையைக் கூா்ந்து கவனிக்க டிரம்ப் நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது.

