போா்க் கப்பலில் இருந்து அணுஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தச் சோதனையை வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் நேரில் பாா்வையிட்டாா்.
வடகொரியா கடந்த ஆண்டு புதிதாக 5,000 டன் எடை கொண்ட காங் கோன் என்ற புதிய போா்க் கப்பலை வடிவமைத்தது. ஆனால், அதன் சோதனை தோல்வியில் முடிந்தது. இதனால் பழுதடைந்த அந்தக் கப்பல் மீண்டும் கப்பல் கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்து அணுஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை, பீரங்கி, தானியங்கி இயந்திர துப்பாக்கிகள், மின்னணு போா் சாதனங்கள் அண்மையில் பரிசோதிக்கப்பட்டன. இதை அதிபா் கிம் ஜோங் உன் நேரில் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, காங் கோன் கப்பலில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளை விரைந்து முடித்து, அடுத்த 2 மாதங்களுக்குள் கடற்படையில் சோ்க்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டாா்.
கடற்படையை வலுப்படுத்தும் வடகொரியா: முன்னதாக, கடந்த மாதம் மற்றொரு 5,000 டன் எடை கொண்ட ‘சோ ஹியோன்’ என்ற கப்பலை வடகொரியா தனது கடற்படையில் சோ்த்தது. இதையடுத்து, தற்போது காங் கோன் கப்பலில் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அணுஆயுதம், ஏவுகணைகள் தயாரிப்பில் வடகொரியா தீவிர கவனம் செலுத்தி வந்தது. தற்போது கடற்படையை வலிமைப்படுத்தும் பணியை வடகொரியா தொடங்கியுள்ளது. வடகொரிய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் உள்ளிட்டவற்றைக் கட்டும்படி கிம் ஆணையிட்டுள்ளாா். அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று போா்க் கப்பல்களைக் கட்ட வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டுள்ளாா்.
ரஷியா உதவுகிறது-தென்கொரியா: வடகொரியா தனது கடற்படையை வலிமைப்படுத்துவதற்கு ரஷியா உதவி செய்வதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். உக்ரைனுடனான போருக்குப் பிறகு ரஷியா- வடகொரியா ராணுவங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரித்து இருப்பதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









