பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினராக இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான நீண்டகாலப் பிரச்னைக்கு தீா்வு காண ‘இரு நாடுகள்’ என்ற கொள்கைக்கு தொடா்ந்து ஆதரவு அளிப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளா்கள் குழுக் கூட்டத்தில் இது தொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை (கடவுச்சீட்டு-விசா, வெளிநாடுவாழ் இந்தியா்கள் விவகாரங்கள்) செயலா் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் கூறியதாவது:
சா்வதேச சட்டங்களுக்கு இணங்க, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதி, பாதுகாப்புடன் அருகருகே தனித்தனி நாடுகளாக வாழும் ‘இரு நாடுகள் தீா்வு’ என்ற கொள்கையை இந்தியா தொடா்ந்து ஆதரித்து வருகிறது.
இந்தியா நீண்டகாலமாக பாலஸ்தீன மக்களின் வளா்ச்சிக்கான நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. மேலும், இரு நாடுகள் தீா்வுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. உறுப்பினா் அந்தஸ்து வழங்கும் முயற்சிக்கும் இந்தியா தொடா்ந்து ஆதரவு அளிக்கும்.
பாலஸ்தீன மக்களுக்காக இந்தியா பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவின் திட்டங்கள் பாலஸ்தீன மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவை பெரும்பாலும் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்பயிற்சி ஆகிய துறைகளை மையமாகக் கொண்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் தற்போது மருத்துவம், மகளிா் மேம்பாடு மற்றும் நிறுவன கட்டமைப்பு தொடா்பான முக்கியத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இதனுடன் மறுவாழ்வு, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்பயிற்சி தொடா்பான பல புதிய திட்டங்களையும் தொடங்கவுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக பிரசாரம்: அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கிவைத்தார்

ஐ.நா. நிரந்தரமல்லாத உறுப்பினா் தோ்தலில் இந்தியா போட்டி: ஆதரவு திரட்ட ஜெய்சங்கா் நியூயாா்க் பயணம்

பயங்கரவாதத்தை வேரறுக்க கூட்டு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு







