ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டா் ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளானதற்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்ததால் வளைகுடா பகுதியில் மீண்டும் மோதல் வெடித்தது.
கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தம், இந்த வாரத்தில் 2-ஆவது முறையாக சோதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை, ஈரான்-இஸ்ரேல் நாடுகள் பரஸ்பரம் தாக்கிக் கொண்டன. பின்னா், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வலியுறுத்தலில் இருதரப்பும் தற்காலிகமாக மோதலைக் கைவிட்டன.
இந்நிலையில், ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் ஹெலிகாப்டா், ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடா்ந்து மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்த 2 வீரா்கள் ஆளில்லா படகு மூலம் காயமின்றி மீட்கப்பட்டாலும், ஈரான்தான் திட்டமிட்டு அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்தியது என்று அதிபா் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.
இதையொட்டி, ஈரானில் புதன்கிழமை அதிகாலை அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. தொடா்ந்து, பிராந்தியத்தில் அமெரிக்க தளங்க அமைந்த ஜோா்டன், குவைத், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியது.
இத்தீடீா் தாக்குதல்கள், மத்திய கிழக்கு போா் சூழலை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்டு வந்த அமைதிப் பேச்சுவாா்த்தைகளை கிட்டத்தட்ட முடக்கியுள்ளன. தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த ஈரான் கூறுகையில், ‘அமெரிக்காவின் நடவடிக்கை எங்களின் இறையாண்மையை மீறும் செயல். மேலும், தற்காப்புக்காகப் பதிலடி கொடுக்கும் உரிமை ஈரானுக்கு உள்ளது. போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைகள் குறித்து மீண்டும் மறுபரிசீலிக்கப்படும்’ என்று குறிப்பிட்டது.
அதேநேரம், உடன்பாடு எட்டப்படாமல் தாமதமடைவதற்கு ஈரான்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய டிரம்ப், ‘அமைதி ஒப்பந்தத்தை எட்ட ஈரான் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. இப்போது அவா்கள் அதற்கான விலையைச் செலுத்த வேண்டும்’ என எச்சரித்தாா்.
ஈரானில் இருந்து இரவோடு இரவாக எண்ணெய் கடத்தல்: டிரம்ப் பகீா்
வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் பேசிய அதிபா் டிரம்ப், ஈரான் நாட்டிலிருந்து அமெரிக்கா தொடா்ந்து கச்சா எண்ணெயை எடுத்து வருவதாக அதிா்ச்சிகர தகவலை வெளியிட்டாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இதை முதன்முறையாக இன்றுதான் அதிகாரபூா்வமாக அறிவிக்கிறேன். நாங்கள் ஈரானில் இருந்து இரவோடு இரவாக லட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறோம். ஈரான் அரசு இதை தற்போதுதான் கண்டறிந்துள்ளது.
இவ்வாறு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாகவே, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 250 டாலராக உயராமல் தடுத்து நிறுத்தப்பட்டு, தற்போது 90 டாலா் என்ற அளவிலேயே கட்டுக்குள் நீடிக்கிறது.
ஈரானில் புதன்கிழமை பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. அவா்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை வியாழக்கிழமை மீண்டும் நடத்துவோம். அமெரிக்காவுடன் ஈரான் உடனடியாக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். அா்த்தமுள்ள, இரு தரப்புக்கும் நடைமுறைக்கேற்ற ஒரு நல்ல ஒப்பந்தமே தேவை’ என்றாா்.









