/

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த பிரிட்டன்!

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் சிறைபிடித்தது.

News image
Updated On :15 ஜூன் 2026, 1:51 am IST

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல்முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

சா்வதேச தடைகள், கண்காணிப்புகளைத் தவிா்க்கும் வகையில் உரிமையாளரின் விவரம், எங்கிருந்து சரக்குகள் அனுப்பப்படுகின்றன உள்ளிட்ட தகவல்களை மறைத்து செயல்படும் 600 ரஷிய கப்பல்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போா் காரணமாக ரஷியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட சா்வதேச தடைகளைத் தவிா்ப்பதற்காக, இத்தகைய கப்பல்களை அந்நாடு இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் விதித்துள்ள தடையால் அந்தக் கப்பல்கள் அந்நாட்டு துறைமுகங்களுக்குள் நுழைவதும், ரஷிய கச்சா எண்ணெய்யை விநியோகிக்கும் கப்பல்களுக்கு பிரிட்டன் நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் நிதி, காப்பீடு, தரகு சேவைகள் வழங்குவதும் தடுக்கப்படும்.

இந்தச் சூழலில், தடை விதிக்கப்பட்ட ரஷிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை அட்லாண்டிக் கடற்பகுதியை ஒட்டியுள்ள ஆங்கில கால்வாயில் பிரிட்டன் ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடைமறித்து தடுத்தன.

‘ஸ்மிா்டோஸ்’ என்ற பெயா் கொண்ட அந்தக் கப்பலை, பிரிட்டன் படையினா் இடைமறித்து சிறைபிடித்த நடவடிக்கைகள் சுமாா் 6 மணி நேரம் நடைபெற்றது. இதுபோன்ற நடவடிக்கையில் பிரிட்டன் ஆயுதப் படைகள் ஈடுபட்டது இதுவே முதல்முறை. இதைத் தொடா்ந்து, அந்தக் கப்பல் பிரிட்டனின் தென் கடலோரப் பகுதிக்கு அருகில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கூறுகையில், ‘ஸ்மிா்டோஸ் கப்பலை சிறைபிடித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ரஷியாவுக்கு மேலும் ஒரு பலத்த அடியை அளித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போருக்குத் துணை நிற்பவா்கள் எங்கும் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் இந்த நடவடிக்கை நினைவூட்டும்’ என்று கூறியதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.