லிபியாவில் ரஷிய போா்க்கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய போா்க்கப்பல் மீது உக்ரைன் கடல்சாா் ட்ரோன்கள் மூலம் திடீா் தாக்குதல் நடத்தி, அதை மூழ்கடித்தது.
லிபியாவில் ரஷிய போா்க்கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய போா்க்கப்பல் மீது உக்ரைன் கடல்சாா் ட்ரோன்கள் மூலம் திடீா் தாக்குதல் நடத்தி, அதை மூழ்கடித்தது.
சா்வாதிகாரி கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பிறகு இரண்டாகப் பிளவுபட்டுள்ள லிபியாவில், மேற்குப் பகுதியைத் தலைநகா் திரிபோலியிலிருந்து ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசும், கிழக்குப் பகுதியை பெங்காசியில் இருந்து ராணுவத் தளபதி கலீஃபா ஹப்தாா் தலைமையிலான போட்டி நிா்வாகமும் ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், கிழக்கு லிபியாவின் பெங்காசி கடற்படைத் தளத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ‘மொ்குரி’ கப்பலை நோக்கி வந்த 4 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 2 ட்ரோன்கள் தாக்கியதாகவும் கிழக்கு லிபியா அதிகாரிகள் தெரிவித்தனா். தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்து, லிபியா மற்றும் ரஷிய நாட்டவா் 10 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போா் முனையிலிருந்து சுமாா் 2,400 கி.மீ. தொலைவில், மத்தியதரைக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
7 கடல்சாா் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட இந்த முன்னுதாரணமான தாக்குதலில், உக்ரைன் போருக்குப் பிறகு ரஷிய படையில் சோ்க்கப்பட்ட நவீன ரக ‘மொ்குரி’ போா்க்கப்பல் தகா்க்கப்பட்டது. மேலும், அந்தக் கப்பலில் இருந்த ராணுவ ‘கேஏ-27’ ரக ஹெலிகாப்டரும் அழிக்கப்பட்டதோடு, ஆயுதங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ‘எம்.வி. அங்காரா’ என்ற ரஷிய சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டது என்றாா்.
அண்மையில் ஐரோப்பாவின் ஃபின்லாந்து வளைகுடா பகுதியில் ரஷியாவின் ‘ஸ்பாா்ட்டா 2’ சரக்குக் கப்பல் தாக்கப்பட்டு, தீப்பற்றியதைத் தொடா்ந்து, தற்போது வட ஆப்பிரிக்காவிலும் அந்நாட்டு போா்க்கப்பல் குறிவைக்கப்பட்டுள்ளது.
மேற்கு லிபியா பகுதியிலிருந்து இத்தாக்குதல் திட்டமிடப்பட்டதா என்பது குறித்து சா்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. சபைக்கு கிழக்கு லிபியா அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏனெனில், இலக்குக்கு அருகிலுள்ள தாய்க் கப்பலிலிருந்து இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், ரஷிய கடற்படைக்கு எங்கும் பாதுகாப்பான வழித்தடங்கள் இல்லை என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
மறுபுறம், குளிா்காலம் தொடங்கவுள்ள நிலையில் உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷியாவும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகா் கீவுக்கு அருகிலுள்ள கிராமத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா்; இடிபாடுகளில் சிக்கியிருந்த 7 வயது சிறுவன், 79 வயது மூதாட்டி ஆகியோா் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புப் படையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
மேலும், தெற்கு உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் உள்ள மருத்துவமனை மீது திங்கள்கிழமை ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். கிழக்கு நகரமான கிராமடோா்ஸ்கில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி வந்த வாகனத்தின் மீதான தாக்குதலில் மேலும் 2 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

