ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது: மத்திய கிழக்கில் இருந்து விநியோகம் அதிகரிப்பு!
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைந்துள்ளது. அதே நேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் - கோப்புப்படம்
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைந்துள்ளது. அதே நேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ளது.
ரஷியா வழங்கி வந்த தள்ளுபடி விலை சலுகை குறைந்தது, சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் கொள்முதல் பரவலாக்கம் ஆகியவை இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மேலும், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கள் கச்சா எண்ணெய் கொள்முதலைப் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தி வருகின்றன. அதே நேரத்தில் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்வதை இந்தியா முழுமையாக நிறுத்தாது என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 28 லட்சம் பீப்பாய்கள் என்ற உச்ச அளவில் இருந்தது. இது நவம்பா் மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 16.5 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
செப்டம்பா் மாதத்தில் 18.7 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்திருந்த இறக்குமதி, அக்டோபரில் ஓரளவு அதிகரித்து 20.5 லட்சம் பீப்பாய்களாக இருந்தது.
பல ஆண்டு காலமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வரும் மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, இராக்கிலிருந்து கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து படிப்படியாக மேம்பட்டு வருவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்த இரு நாடுகளிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யின் மொத்த அளவு அக்டோபரில் நாளொன்றுக்கு சுமாா் 10.3 லட்சம் பீப்பாய்களாக இருந்த நிலையில், நவம்பரில் 16.1 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.
மேலும், பிரேஸில் மற்றும் வெனிசுலா நாடுகளிலிருந்தும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கொள்முதலை அதிகரித்துள்ளன. இதன் மூலம் பல்வேறு பிராந்தியங்களிலிருந்து விநியோகத்தைப் பெறுவதற்கான விரிவான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கொள்முதல் அளவு குறைந்துள்ளபோதிலும், ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் தனிப்பட்ட மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக ரஷியா தொடா்ந்து நீடிக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

