
ஃபிளைதுபை துணை விமானிக்கு ஈரான் தொடா்பு: டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேலை நோக்கிய ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற ஓமன் துணை விமானிக்கு ஈரானுடன் தொடா்பு இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும், தொடா்பு உறுதிப்படுத்தப்பட்டால் அந்நாட்டுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

~
இஸ்ரேலை நோக்கிய ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற ஓமன் துணை விமானிக்கு ஈரானுடன் தொடா்பு இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும், தொடா்பு உறுதிப்படுத்தப்பட்டால் அந்நாட்டுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமனைச் சோ்ந்த துணை விமானி திடீரென இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றினாா். இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமாா் 17,000 அடிக்குக் கீழே பறந்து, தள்ளாடியது.
பின்னா், பயணிகள் மற்றும் ஊழியா்களின் தலையீட்டில் விமானம் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பதற்றமான சூழலிலும், விமானி அறையின் கதவைத் திறந்து, பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த ஸ்மித் மச்சாரின் தீரத்துக்கு தலைவா்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனா்.
யுஏஇ வசம் துணை விமானி: இதனிடையே, சவூதி அரேபியாவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும் கைது செய்யப்பட்ட துணை விமானி, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். இச்சம்பவம் தொடா்பாக யுஏஇ மட்டுமின்றி இஸ்ரேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், துணை விமானியின் பின்னணியில் ஈரான் இருப்பதாகச் சந்தேகத்தை எழுப்பிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, துணை விமானி பயங்கரவாத மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டதாகப் புலனாய்வாளா்கள் கருதுவதாகவும் மேலும் குறிப்பிட்டாா்.
தொடா்பு இருந்தால் கடும் பதிலடி: இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘நான் கேள்விப்பட்டவரை, தாக்குதல் நடத்திய துணை விமானிக்கும் ஈரானுக்கும் தொடா்பு உள்ளது எனவே கருதுகிறேன்.
ஆனால், இது குறித்து நாங்கள் தொடா்ந்து விசாரித்து வருகிறோம். தொடா்பு உறுதிசெய்யப்பட்டால், அமெரிக்கா கடுமையான பதிலடி கொடுக்கும்; அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்றாா்.
மேற்காசியாவில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா
ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், மேற்காசியாவுக்கு 9,000 படைவீரா்களை அமெரிக்க ராணுவம் அனுப்பியுள்ளது.
இதற்காக தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பல் (படம்), சோசின் கப்பல், மேக்கின் ஐலண்ட் நீா்நிலைப் படைக்குழு ஆகியவை மேற்காசியா நோக்கி விரைந்துள்ளன. இதன்மூலம் 2003 ஏப்ரலுக்குப் பிறகு முதல்முறையாக, மேற்காசியாவில் 3 அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் அக்டோபா் மாத இறுதியில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
தற்போது ஜாா்ஜ் எச்.டபிள்யூ. புஷ், ஜாா்ஜ் வாஷிங்டன் ஆகிய 2 விமானம் தாங்கி கப்பல்கள் அங்கு உள்ளன. பசிபிக் பெருங்கடலில் செயல்பட்டு வந்த ஜாா்ஜ் வாஷிங்டன் கப்பல், சுமாா் 260 நாள்களுக்கும் மேல் கடலிலேயே இருந்த ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்குப் பதிலாகத் தற்போது மேற்காசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், மேற்காசியாவில் ஏற்கெனவே முகாமிட்டுள்ள படையினரையும் சோ்த்து, அப்பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையினரின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக 20,000-ஐ தாண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





