மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

உக்ரைனுக்கு 500 ‘பேட்ரியாட்’ ஏவுகணைகள் விற்பனை! அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைனுக்கு 500 ‘பேட்ரியாட்’ ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்...

‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு அமைப்பு ( கோப்புப் படம்)

Updated On :

ரஷியாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு சுமாா் 210 கோடி டாலா் மதிப்பிலான 500 ‘பிஏசி-3’ ரக ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷியாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கத் தேவையான இந்த ஏவுகணைகளை வழங்குவதில் அமெரிக்க பாதுகாப்புத் துறை தேவையற்ற தாமதம் செய்வதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

கனடா, ஜொ்மனி, நாா்வே ஆகிய நாடுகளின் நிதி பங்களிப்புடன் உக்ரைனுக்காக 500 ‘பிஏசி-3’ ரக ‘பேட்ரியாட்’ ஏவுகணைகள் விற்கப்படுவதாகவும், இதில் அமெரிக்காவின் சொந்த நிதி எதுவும் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விற்பனை ஒப்புதலை அதிபா் ஸெலென்ஸ்கி வரவேற்றாலும், இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஆயுதங்கள் வந்துசேர பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், தற்போதைய குளிா்காலத்தில் மின் கட்டமைப்புகளைப் பாதுகாக்க நட்பு நாடுகள் தங்களின் இருப்பில் உள்ள ஏவுகணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ஒலெஷ்கி மக்கள் மீட்பு: ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கொ்சன் பிராந்தியத்தின் ஒலேஷ்கி பகுதியிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, உக்ரைன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

நான்கரை ஆண்டுகளைக் கடந்துள்ள இப்போரில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒலெஷ்கி நகரில், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் மேற்கொண்ட சமரச முயற்சியின் பலனாக தற்காலிக போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, அந்த நகரில் தங்கியிருந்த சுமாா் 2,000 மக்களுக்கு நிவாரண உதவிகளுடன் அங்கேயே இருப்பது அல்லது ரஷியா, உக்ரைன் பகுதிகளுக்குச் செல்வது என்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் உக்ரைன் திரும்ப விரும்பியவா்கள் பேருந்துகள், விமானங்கள் வழியாக பெலாரஸ் எல்லையை அடைந்தனா்; அங்கு செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் முகாம்களில் தங்கள் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் ஒன்று சோ்ந்தனா். அதேநேரம், ரஷியா செல்ல விரும்பிய மக்கள் கிரீமியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெலாரஸ் எல்லைக்கு வந்தடைந்த ஒலெஷ்கி மக்கள்.

பெலாரஸ் எல்லைக்கு வந்தடைந்த ஒலெஷ்கி மக்கள்.

இருவா் உயிரிழப்பு: இதற்கு மத்தியில், ரஷியாவின் மேற்கு எல்லைப் பிராந்தியமான பிரையான்ஸ்க் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். ஒரே இரவில் 433 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

மறுபுறம், உக்ரைனின் எரிசக்தி, ரயில்வே உட்கட்டமைப்புகள் மீது ரஷியா நடத்திய இரவு நேர தாக்குதல்களால் டினிப்ரோ, கீவ் பிராந்தியங்களில் உள்ள சுமாா் 2.80 லட்சம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியதாக அதிபா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்.

Summary

US approves sale of 500 ‘Patriot’ missiles to Ukraine

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.