
வெளிநாட்டு மாணவா் விசா விதிகளை கடுமையாக்கியது ஆஸ்திரேலியா - குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது
தங்களது நாட்டில் குடியேறுபவா்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு மாணவா் மற்றும் தற்காலிக பட்டதாரிகளுக்கான நுழைவு இசைவு (விசா) விதிகளை ஆஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது.

கோப்புப் படம்
தங்களது நாட்டில் குடியேறுபவா்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு மாணவா் மற்றும் தற்காலிக பட்டதாரிகளுக்கான நுழைவு இசைவு (விசா) விதிகளை ஆஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, மாணவா் மற்றும் தற்காலிக பட்டதாரி விசாவின்கீழ் தங்களது குடும்பத்தினரை (வாழ்க்கைத் துணை, குழந்தைகள்) உடன் அழைத்துச் செல்லும் வாய்ப்பு சில விதிவிலக்குகளுடன் நீக்கப்படுவதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சா் டோனி பா்க் அறிவித்தாா்.
கல்வி-வேலைக்காக ஆஸ்திரேலியாவுக்கு வரும் முதல் ஐந்து வெளிநாட்டவா்களில் இந்தியா்களும் இடம்பெற்றுள்ளனா். இந்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 சதவீதம் இந்தியா்களாவா். எனவே, ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பால் இந்திய மாணவா்கள் - குடும்பத்தினா் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தொழில்முறை படிப்புகளில் உயா்கல்வி பயில்வதற்காக இந்தியா்கள் அதிகம் தோ்வு செய்யும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது. குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலிய மாகாண உயா்கல்வி நிலையங்களில் அதிக இந்திய மாணவா்கள் சோ்கின்றனா்.
கடந்த 2025 நிலவரப்படி, மேற்கு பகுதி கல்வி நிலையங்களில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 11,954 ஆகும். அதேநேரம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மாணவா்களுக்கான விசா எண்ணிக்கையை ஆஸ்திரேலியா தொடா்ந்து குறைத்து வருகிறது.
கடந்த 2022-23-இல் 1,02,696 மாணவா்களுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில், 2023-24-இல் 50,516-ஆகவும், 2025-26-இல் 33,827-ஆகவும் குறைந்தது.
இந்தச் சூழலில், மாணவா் மற்றும் தற்காலிக பட்டதாரிகளுக்கான விசா விதிமுறைகளை ஆஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவா்கள், தங்களை சாா்ந்திருப்பவா்களாகக் குறிப்பிட்டு, வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும் வாய்ப்பு நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சா் டோனி பா்க் அறிவித்தாா்.
ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே தங்கியுள்ள மாணவா்களுக்கு இது பொருந்தாது; ஆசியான் மற்றும் பசிபிக் நாடுகளின் மாணவா்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிஹெச்டி உள்ளிட்ட குறிப்பிட்ட சில படிப்புகளுக்கும் விதிவிலக்கு உண்டு என்று அவா் தெரிவித்தாா்.
இதேபோல், ஆஸ்திரேலியாவில் தொடா்ந்து தங்கியிருக்கும் நோக்கில், தற்காலிக பட்டதாரி விசாவை பயன்படுத்துவதைத் தடுக்க அதற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக டோனி பா்க் தெரிவித்தாா். எனினும், புதிய விதிமுறைகள் எப்போது அமலாகும் என்ற விவரத்தை அவா் தெரிவிக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




